புதுடெல்லி: உக்ரேனில் இருந்து இதுவரை 22,500 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
உக்ரேன் மீது ரஷ்யா போர் தொடுத்ததைத் தொடர்ந்து அந்நாட்டில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இந்தியாவின் மீட்பு நடவடிக்கை குறித்து மாநிலங்களவையில் அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று அறிக்கை தாக்கல் செய்து உரையாற்றினார்.
"உக்ரேனிலிருந்து இந்தியர்களை மீட்க 'ஆபரேஷன் கங்கா' திட்டம் தொடங்கப்பட்டது. கடும் சவால்களுக்கு இடையே உக்ரேனிலிருந்து 22,500க்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஐம்பது விழுக்காட்டுக்கு மேற்பட்ட மாணவர்கள் ரஷ்ய எல்லையான கிழக்கு உக்ரேன் பல்கலைக் கழகங்களில் படித்து வந்தனர்.
உத்தரப் பிரதேசம், கேரளம், தமிழகம், கர்நாடகம், ராஜஸ்தான், பீகார் ஆகிய மாநிலங்களை சேர்ந்த அதிகளவிலான மாணவர்கள் மீட்கப்பட்டுள்ளனர் என்று அவர் மாநிலங்களவையில் தெரிவித்தார்.

