புதுடெல்லி: ராஜஸ்தான் மாநிலத்தில் பராமரிப்புப் பணியின்போது இந்திய ஏவுகணை எதிா்பாராதவிதமாக விண்ணில் பாய்ந்து பாகிஸ்தான் எல்லைப் பகுதிக்குள் சென்று விழுந்தது. தவறுதலாக நிகழ்ந்த இந்த சம்பவம் தொடா்பாக விசாரணை நடத்த இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. விமானம் பாகிஸ்தான் பகுதிக்குள் விழுந்ததற்கு அந்த நாடு கண்டனம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் இதுகுறித்து மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் (படம்) நேற்று மாநிலங்களவையில் விளக்கம் அளித்தார். அதில், "இந்திய ஏவுகணை தவறுதலாக பாகிஸ்தானுக்குள் சென்றது தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விசாரணையில் விபத்துக்கான சரியான காரணம் தெரியவரும்.
இந்த சம்பவத்தை அடுத்து, செயல்பாடுகள், பராமரிப்பு மற்றும் ஆய்வுகளுக்கான நிலையான செயல்பாட்டு நடைமுறைகள் பற்றிய ஆய்வு நடைபெறுகிறது.
"ஆயுத அமைப்புகளின் பாதுகாப்பிற்கு அதிக முன்னுரிமை கொடுக்கிறோம். பாதுகாப்பு தளவாடங்களில் குறைபாடுகள் கண்டறியப்பட்டால் உடனடியாக சரி செய்யப்படும்.
ஏவுகணை அமைப்பு மிகவும் நம்பகமானது, பாதுகாப்பானது என்பதை நான் இந்த சபைக்கு உறுதியளிக்கிறேன். மேலும், பாதுகாப்பு நடைமுறைகள் அவ்வப்போது மதிப்பாய்வு செய்யப்படுகின்றன. நமது ஆயுதப் படையினர் நன்கு பயிற்சி பெற்றவர்கள், கட்டுப்பாடு மிக்கவர்கள். அத்தகைய அமைப்புகளை கையாள்வதில் நன்கு அனுபவம் பெற்றவர்கள்.
"ஏவுகணை பாகிஸ்தான் பகுதியில் விழுந்தது பின்னர்தான் தெரிந்தது. எனினும் இச்சம்பவம் வருத்தம் அளிக்கிறது. ஆனால், இதனால் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என்பது சற்றே நிம்மதி தருகிறது. இந்த விஷயத்தை அரசு மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்டதுடன் உயர்மட்ட விசாரணைக்கு அதிகாரப்பூர்வ உத்தரவு வழங்கப்பட்டுள்ளது," என்றார்.

