புதுடெல்லி: இந்திய ஜனநாயகத்தில் சமூக ஊடகங்களின் தவறான தலையீட்டைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று நேற்று நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி குரல்கொடுத்தார்.
சமூக நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் வகையில் சமூக ஊடகங்கள் ஆதிக்கம் செலுத்துவதை தடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இளைஞர்களின் சிந்தனையைக் கெடுத்து அவர்களிடம் வெறுப்புணர்வை உருவாக்கும் வகையில் பல கருத்துகளும் சில ஊடகங்கள் மூலம் பரப்பப்படுவதாக அவர் தெரிவித்தார்.
செய்தி நிறுவனங்கள் வெளியிடும் உண்மையான செய்திகளைப் போல போலி விளம்பரங்களைச் சோடித்து அவை சமூக ஊடகங்களில் பதிவேற்றப்படுவதாக சோனியா கூறினார்.
அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்காக விளம்பரம் செய்ய பிற கட்சிகளைக் காட்டிலும் பாஜகவுக்குச் சலுகை விலை அளித்து ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தள நிறுவனங்கள் ஆதரவாக செயல்பட்டதாக அல்ஜசீரா செய்தி வெளியிட்டது.
இதைச் சுட்டிக்காட்டி சோனியா பேசினார். தலைவர்கள், கட்சிகள், அவர்களின் பினாமிகளால் அரசியல் கதைகளை வடிவமைக்க ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற உலகளாவிய நிறுவனங்கள் அதிகளவில் பயன்படுத்தப்படுவதாக சோனியா குறிப்பிட்டார்.
மற்ற அரசியல் கட்சிகளுடன் ஒப்பிடும்போது பாஜகவின் தேர்தல் விளம்பரங்களுக்கு ஃபேஸ்புக் சலுகைகளை வழங்கி இருப்பதாக தெரிய வருகிறது என்றாரவர்.
இந்நிலையில், அல்ஜசீரா, தி ரிப்போர்ட்டர்ஸ் ஆகிய ஊடகங்கள் வெளியிட்ட செய்தியைச் சுட்டிக் காட்டி இது பற்றி டுவிட்டரில் கருத்து தெரிவித்த காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி, இத்தகைய ஒரு நிலை ஜனநாயகத்திற்கு மிக மோசமானது என்று குறை கூறினார்.

