அகமதாபாத்: அமெரிக்காவுக்குச் சட்டவிரோதமாகச் செல்ல முயன்ற 136 இந்தியர்களைக் காணவில்லை என்றும் அவர்கள் கடத்தப்பட்டு இருக்கலாம் என்று அஞ்சப்படுவதாகவும் குஜராத் காவல்துறை தெரிவித்து இருக்கிறது.
அமெரிக்காவில் சட்டவிரோதமாகத் தங்கி இருக்கும் சுமார் 10 மில்லியன் பேரில் 5.87 லட்சம் பேர் இந்தியர்கள் என்று கூறப்படுகிறது.
இந்தியாவின் வட மாநிலங்களில் இருந்து அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாகச் செல்வோரின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.
இந்நிலையில், குஜராத்தின் அகமதாபாத், காந்திநகர் உள்ளிட்ட பல பகுதிகளில் வசித்து வந்த சுமார் 37 குடும்பங்களைச் சேர்ந்த 136 இந்தியர்கள், அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேற திட்டமிட்டு ஆள்கடத்தல் கும்பல் உதவியை நாடியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அந்தக் கும்பலின் உதவியுடன் கடந்த ஜனவரி மாதம் 10ஆம் தேதி முதல் 20ஆம் தேதிக்குள் துருக்கி சென்று அங்கிருந்து விமானத்தில் அல்லது கப்பலில் மெக்சிகோ புறப்பட்டு மெக்சிகோவில் இருந்து தரை வழியாக அமெரிக்காவுக்குள் எல்லை கடந்து ஊடுருவிச் செல்வது அவர்களின் திட்டம்.
அப்படி புறப்பட்ட 136 பேரும் துருக்கியின் இஸ்தான்புல் நக ருக்குச் சென்றடைந்ததாகத் தெரிய வருகிறது. பிறகு அவர்கள் என்ன ஆனார்கள் என்பது தெரியவில்லை.
துருக்கியில் தரையிறங்கியதும் அந்த இந்தியர்களைச் சில குண்டர்கும்பல்கள் பிடித்து வைத்துக்கொண்டு ரூ. 5 லட்சம் வரை பணம் கேட்பதாக அந்த இந்தியர்களின் உறவினர்களுக்குச் செய்தி கிடைத்ததாகவும் ஆனால் அவர்கள் யாரும் அது பற்றி புகார் செய்யவில்லை என்றும் குஜராத் காவல்துறை கூறியது.
இதன் தொடர்பில் விசாரணை நடப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். அண்மையில் குஜராத் குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் அமெரிக்கா-கனடா எல்லையில் கடுங்குளிரில் உயிரிழந்தனர்.
அந்தச் சம்பவத்தை அடுத்து இந்தியாவில் செயல்படும் ஆள்கடத்தல் கும்பல்கள் பற்றிய விவரங்கள் வெளியே தெரியவந்தன.
இந்தியாவில் செயல்படும் ஆள்கடத்தல் பேர்வழிகள் துருக்கி, மெக்சிகோ நாடுகளின் கடத்தல்காரர்களுடன் சேர்ந்து செயல்படுவதாகவும் கூறப்படுகிறது.