செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
b6394a6e-6e0a-423b-bde4-5a7ac5a9388c
-

தலையங்கி: மார்ச் 21ல் விசாரணை

புதுடெல்லி: கர்நாடக மாநிலத்தில் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளில் தலையங்கி (ஹிஜாப்) அணிவது தொடர்பான வழக்கை விசாரித்து வந்த கர்நாடக உயர் நீதிமன்றம் வகுப்பறைகளில் தலையங்கி அணிய தடை விதித்து மாநில அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று தீர்ப்பு அளித்தது.

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு இம்மாதம் 21ஆம் தேதி விசாரணைக்கு வரும் என்று நேற்று தெரிவிக்கப்பட்டது.

பஞ்சாப் முதல்வரானார் மான்

அமிர்தசரஸ்: பஞ்சாப் சட்டசபைத் தேர்தலில் மொத்தமுள்ள 117 தொகுதிகளில் 92 தொகுதிகளை ஆம் ஆத்மி கைப்பற்றியதை அடுத்து முதல்வர் வேட்பாளராக போட்டி போட்ட பகவந்த் மான், ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவால் முன்னிலையில் நேற்று முதல்வராகப் பதவி ஏற்றார்.

9 விநாடிகளில் இடிக்கப்படும்

நொய்டா: உத்தரப் பிரதேசத்தில் நொய்டா நகரில் சூப்பர்டெக் என்ற நிறுவனம் மொத்தம் 633 வீடுகளுடன் 31, 32 மாடிகளைக் கொண்ட இரண்டு பெரிய அடுக்குமாடி குடியிருப்புக் கட்டடங்களைக் கட்டி உள்ளது.

ஆனால் அவை விதிகளை மீறி கட்டப்பட்டவை என்றும் அவற்றை இடித்துவிடுமாறும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளதை அடுத்து அந்த இரட்டை கோபுரக் கட்டடங்கள் மே மாதம் 22ஆம் தேதி பகல் 2.30 மணியளவில் 9 விநாடிகளில் இடிக்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

விபத்து: ஐவர் பலி

புதுடெல்லி: சத்தீஸ்கரில் கரியாபந்த் நகரில் இருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மெயின்பூர் நோக்கிச் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு லாரியும் டிராக்டரும் மோதியதில் ஐவர் கொல்லப்பட்டனர். இதர 17 பேர் காயம் அடைந்து உள்ளதாகவும் காவல் துறை விசாரணை நடப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

நரபலி முயற்சி: மூவர் கைது

நொய்டா: உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவை அடுத்துள்ள சிஜர்சி என்ற கிராமத்தைச் சேர்ந்த மணம் ஆகாத சோனு பால்மிகி என்பவர், ஒரு மந்திரவாதியின் பேச்சைக்கேட்டு, பக்கத்து வீட்டில் வசித்து வந்த 7 வயது சிறுமியை நண்பர் ஒருவருடன் கடந்த 13ஆம் தேதி கடத்திச் சென்று தன் உறவினர் வீட்டில் அடைத்துவிட்டார்.

நல்ல வேளையாக, அதிகாரிகள் அந்தச் சிறுமியை மீட்டு சோனுவையும் அவரின் நண்பரையும் கைது செய்தனர். குடிகாரரான சோனு, தனக்குத் திருமணம் நடக்கவேண்டும் என்பதற்காக இந்தக் காரியத்தைச் செய்ததாக ஒப்புக்கொண்டார். இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மந்திரவாதி உள்ளிட்ட மூவரை அதிகாரிகள் தேடி வருகிறார்கள்.