குலாம் நபி ஆசாத் வீட்டில் தீவிர ஆலோசனை: சோனியாவுக்கு நெருக்கடி
புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்ல வேண்டுமெனில், அனைத்து நிலைகளிலும் முடிவு எடுக்கக்கூடிய, அனைவரையும் உள்ளடக்கிய கூட்டுத் தலைமையை உருவாக்குவது மட்டுமே ஒரே வழி என அக்கட்சியைச் சேர்ந்த அதிருப்தி குழு தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
'ஜி23' என்று குறிப்பிடப்படும் அதிருப்தியாளர்கள் குழுவைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள், நேற்று முன்தினம் இரவு மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் தலைமையில் தீவிர ஆலோசனை மேற்கொண்டனர்.
இதில், கபில்சிபல், ஆனந்த் சர்மா, சசிதரூர், மணிஷ் திவாரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். ராஜீவ்காந்தி குடும்பத்தின் தீவிர விசுவாசியாகக் கருதப்படும் மணிசங்கர் அய்யரும் கலந்து கொண்டார். இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னர் 'ஜி23' தலைவர்கள் சார்பில் கூட்டறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது.
அதில், பாஜகவை தீவிரமாக எதிர்க்க வேண்டுமானால் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த முன்னுரிமை அளிக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
"எதிர்வரும் 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்குள் பாஜகவுக்கு எதிராக நம்பிக்கைக்குரிய மாற்று அணியை உருவாக்க வேண்டும். அதற்கு ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் காங்கிரஸ் பேச்சுவார்த்தையைத் தொடங்க வேண்டும்," என அந்த அறிக்கையில் மேலும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே குஜராத் முன்னாள் முதல்வர் சங்கர் சிங் வகேலா உள்ளிட்ட மேலும் சிலர் 'ஜி23' குழுவில் இணைந்துள்ளனர். இதனால் இக்குழுவின் பலம் அதிகரித்து வருகிறது.
நேற்று முன்தினம் காங்கிரஸ் மூத்த தலைவர் கபில்சிபல், கட்சியை வலுப்படுத்த வேண்டுமெனில், காந்தி குடும்பத்தினர் தலைமைப் பொறுப்பில் இருந்து விலகி நிற்க வேண்டும் என்று கூறியிருந்தார். இதற்கு சோனியா காந்தியின் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கட்சியைப் பிளவுபடுத்தும் நோக்கில் 'ஜி23' தலைவர்கள் தனியாக சந்தித்துப் பேசி வருவதாகவும் நூறு கூட்டங்களை நடத்தினாலும் சோனியாவை பலவீனப்படுத்த முடியாது என்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார். ஒட்டுமொத்த கட்சியும் சோனியாவுக்கு ஆதரவாக உள்ளது என்றார் அவர்.
இதற்கிடையே, குலாம் நபி ஆசாத்தை நேற்று முன்தினம் இரவு சோனியா தொடர்பு கொண்டு பேசியதாகவும் 'ஜி23' தலைவர்களைச் சந்திக்கத் தயார் என்று கூறியதாகவும் ஹிந்துஸ்தான் டைம்ஸ் ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
சோனியா காந்தி, 'ஜி23' தலைவர்கள் இடையேயான சந்திப்புக்குப் பிறகே காங்கிரஸ் கட்சித் தலைமையில் மாற்றம் ஏற்படுமா அல்லது கூட்டுத்தலைமைக்கு சோனியா காந்தி ஒப்புக்கொள்வாரா என்பது தெரியவரும்.
அவரது ஆதரவாளர்களும் கடந்த இரு தினங்களாக தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், கூட்டுத் தலைமை என்ற ஏற்பாடு அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசுக்குப் பின்னடைவை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளதாக அரசியல் கவனிப்பாளர்கள் சிலர் கருதுகின்றனர்.

