திருவனந்தபுரம்: பொதுமக்களிடம் கனிவாக நடந்துகொள்ளும் அரசு அதிகாரிகளுக்கு மட்டுமே இனி பதவி உயர்வு அளிக்கப்படும் என கேரள அரசு அறிவித்துள்ளது.
பதவி உயர்வு அளிப்பதற்கு முன்பு அரசு ஊழியர்களுக்கு குறிப்பிட்ட சில அம்சங்களின் அடிப்படையில், பத்து மதிப்பெண்கள் வரை அளிக்கப்படும் என்றும் ஐந்து மதிப்பெண்களுக்கு மேல் பெற்றால்தான் பதவி உயர்வுக்கு தகுதி பெறுவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பணியாளரின் திறமை, அவர் பணியிடத்தில் நடந்துகொள்ளும் முறை, அலுவலக கோப்புகளை விரைவாக பார்த்து அனுப்புவது, அதன் குறைகளை உடனடியாக சுட்டிக்காட்டுவது ஆகியவற்றுக்கு மதிப்பெண்கள் வழங்கப்படும்.
மேலும், அரசு சேவைகளுக்காக அரசு அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்களிடம் கனிவாக நடந்துகொள்வது அவசியம் என்றும் பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் பதவி உயர்வைப் பாதிக்கும் என்றும் கேரள அரசு தெரிவித்துள்ளது.
இந்தப் புதிய நடைமுறைக்கு அரசு ஊழியர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

