செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
af7b3383-9713-4075-88ca-f6367e48e5b0
-

வெப்ப அலை வீசும் என எச்சரிக்கை

புதுடெல்லி: நாட்டின் கிழக்கு பகுதிகளில் வழக்கத்தைவிட அதிக அளவில் வெப்ப அலை வீச வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அடுத்த சில தினங்களுக்கு கிழக்கு மாநிலங்களில் இந்த வெப்ப அலை வீசும் என கணிக்கப்பட்டுள்ளது. குஜராத், ராஜஸ்தான், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகம் இருக்கும் என்றும் அதேசமயம் கோவா உள்ளிட்ட சில மாநிலங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.

37% சிறார் படுக்கச் செல்லும் முன் கைபேசி பயன்படுத்துகின்றனர்

புதுடெல்லி: நாடு முழுவதும் 37.15% சிறார்கள் இரவு படுக்கச் செல்லும் முன்னர் கைபேசியைப் பயன்படுத்துவதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார். மதிமுக பொதுச்செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ இதுதொடர்பாக எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், படுக்கையில் இருக்கும்போதும்கூட 23 விழுக்காடு சிறார் கைபேசி பயன்படுத்துவது தெரியவந்துள்ளது என்றார். எனினும் சிறார் மத்தியில் கைபேசி பயன்பாடு அதிகரித்துள்ளதா என்பது தொடர்பாக உறுதி செய்யப்பட்ட தகவல்கள் ஏதும் மத்திய அரசிடம் இல்லை என்றார் அமைச்சர் ஸ்மிருதி இரானி.

பதினாறு சீனர்களுக்கு குடியுரிமை

புதுடெல்லி: கடந்த 15 ஆண்டுகளில் 16 சீன குடிமக்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. 2007 முதல் குடியுரிமை அளிக்கக் கோரும் சீனர்களின் விண்ணப்பங்கள் கவனமாகப் பரிசீலிக்கப்பட்டதாக உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் கூறினார். இந்தியக் குடியுரிமை கோரியுள்ள மேலும் பத்து சீனர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

800,700 காலிப் பணியிடங்கள் உள்ளன

புதுடெல்லி: நாடு முழுவதும் மத்திய அரசுத் துறைகளில் சுமார் 800,700 பணியிடங்கள் காலியாக உள்ளன. இத்தகவலை மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். ரயில்வே துறையில் மட்டும் சுமார் முந்நூறாயிரம் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாகவும் நாட்டில் தற்போது 3.1 மில்லியன் பேர் அரசுத்துறைகளில் பணியாற்றி வருவதாகவும் அமைச்சர் கூறினார்.

1.28 மில்லியன் சாலை விபத்துகள்

புதுடெல்லி: நாடு முழுவதும் கடந்த 2018, 2019, 2020ஆம் ஆண்டுகளில் மொத்தம் 1.28 மில்லியன் சாலை விபத்துகள் நிகழ்ந்துள்ளன என்றும் 432,000 பேர் இறந்துவிட்டதாகவும் மத்திய நெடுஞ்சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். மேலும், 1.26 மில்லியன் பேர் காயமடைந்துள்ளனர். "தமிழகத்தில்தான் அதிக விபத்துகள் நடந்துள்ளன. அங்கு 45,484 விபத்துகள் நடந்திருப்பதுடன் 80,059 பேர் இறந்துள்ளனர். சுமார் ஐம்பதாயிரம் பேர் காயமடைந்துள்ளனர்," என்றார் நிதின் கட்காரி.

முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன்

மாநிலங்களவை உறுப்பினராக வாய்ப்பு

புதுடெல்லி: ஆம் ஆத்மி கட்சி சார்பில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக, பஞ்சாப் மாநில புதிய முதல்வராக பதவியேற்ற பகவந்த் மானுக்கு அவர் வாழ்த்து தெரிவித்திருந்தார். தமது நண்பர் முதல்வராகப் பொறுப்பேற்றுக்கொண்டது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக ஹர்பஜன் சிங் கூறியிருந்த நிலையில், அவரை எம்பியாக்க ஆம் ஆத்மி தலைமை முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

மீண்டும் இ-விசா வழங்கும் இந்தியா

புது­டெல்லி: வெளிநாட்டுப் பயணிகளுக்கான 'இ-விசா', வழக்கமான சுற்றுலா விசா ஆகியவை மீண்டும் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

மொத்தம் 156 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு இந்த விசாக்கள் வழங்கப்படும் என மத்திய சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது.

'நீங்கள் ஆவலோடு எதிர்நோக்கி இருக்கும் இந்திய பயணத்துக்கான காத்திருப்பு முடிவடைந்துவிட்டது. எனவே பயணத்துக்கு தயாராகுங்கள்," என அந்த அமைச்சு தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

மத்திய அரசின் இந்த முடிவை வரவேற்பதாக சுற்றுலாத் துறையினர் தெரிவித்துள்ளனர். சுற்றுலாத்துறை மீண்டு எழ உதவிகரமாக இருக்கும் என்றும் கூறியுள்ளனர்.