புதுடெல்லி: கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை அரசுக்கு உதவும் வகையில் ஒரு பில்லியன் அமெரிக்க டாலரை கடனாக வழங்கி உள்ளது இந்தியா. இத்தொகையைக் கொண்டு மருந்து, உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை இலங்கை வாங்க உள்ளது.
மேலும் பொருளியல் நெருக்கடியில் இருந்து விடுபடுவதற்கான நடவடிக்கைகளையும் அந்நாடு மேற்கொள்ளும்.
நேற்று முன்தினம் டெல்லி வந்த இலங்கை நிதியமைச்சர் பசில் ராஜபக்சே, இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்தார். இருதரப்புக்கும் இடையேயான பொருளியல் ஒத்துழைப்பு குறித்து அப்போது பேசப்பட்டது.
அதன் பின்னர் ஒரு பில்லியன் டாலர் கடன் தொடர்பாக இந்தியாவின் எஸ்பிஐ வங்கிக்கும் இலங்கை அரசுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
முன்னதாக, பிரதமர் மோடியை சந்தித்த, இலங்கை நிதியமைச்சர் பசில் ராஜபக்சே, பொருளியில் நெருக்கடியில் உள்ள இலங்கைக்கு உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்ததுடன், நடப்பு விவகாரங்கள் குறித்தும் விவாதித்ததாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பசில் ராஜபக்சே உடனான சந்திப்பு குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், "முதலில் அண்டை நாடு. இந்தியா, இலங்கையின் பக்கம் நிற்கிறது. அத்தியாவசிய பொருள்கள் விநியோகத்திற்காக இலங்கைக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்களை தருவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது," என்று குறிப்பிட்டுள்ளார்.

