புதுடெல்லி: இந்தியாவில் 2024 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியை வீழ்த்த, தேவைப்பட்டால் ஆம் ஆத்மி தலைமையையும் காங்கிரஸ் ஏற்கும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான திரு ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
அண்மையில் நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்துள்ளது. இதனால் அந்த மாநிலங்களில் காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் பதவி விலகியுள்ளனர்.
இந்நிலையில் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் திரு சிதம்பரம், காங்கிரஸ் தலைவர் தேர்தல், காங்கிரஸின் பலவீனம், காங்கிரஸ் செய்ய வேண்டிய மீள் கட்டமைப்புப் பணிகள் எனப் பலவற்றையும் குறித்து விரிவாகப் பேசியுள்ளார்.
"ஐந்து மாநிலத் தேர்தல் தோல்விக்குப் பின்னர் காங்கிரஸ் தலைமைப் பொறுப்புகளில் இருந்து விலக சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி முன்வந்தனர். ஆனால், காங்கிரஸ் காரிய கமிட்டி அதை ஏற்றுக்கொள்ளவில்லை.
"2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த காங்கிரஸ் நிச்சயமாக சில விஷயங்களில் இறுக்கத்தைத் தளர்த்தி வளைந்து நெளிந்து கொடுத்தே போக வேண்டும்.
'இது மம்தாவுக்கும் கெஜ்ரிவாலுக்கும் கூடப் பொருந்தும்.
"ஒவ்வொரு மாநில வாரியாக பாஜக எதிர்ப்பு அணியை வலுப்படுத்த வேண்டும்.
'மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸுடன் இணைந்து பாஜகவை எதிர்க்க வேண்டியுள்ளது.
"பஞ்சாப்பில் ஆம் ஆத்மி தலைமையின் கீழ் நாங்கள் பாஜகவை எதிர்க்கத் தயாராக உள்ளோம்.
'இது மாதிரி ஒவ்வொரு மாநிலத்திலும் எதிர்ப்பை வலுப்படுத்தினால் பாஜகவை வீழ்த்துவது எளிதாகும்," என்று கூறிய திரு சிதம்பரம், ஆகஸ்ட் மாதம் கட்சித் தேர்தலை நடத்தி நிரந்தரத் தலைவரை அறிவிக்கலாம் என்று கூறினார்.
ஜி 23 என்ற காங்கிரஸின் மூத்த தலைவர்களின் கூட்டம் நடைபெற்ற நிலையில் இந்த பேட்டி வெளியாகி இருக்கிறது. காங்கிரஸ் கட்சிக்கு கூட்டுத் தலைமை வேண்டும் என வலியுறுத்தி வரும் காங்கிரஸ் அதிருப்தி தலைவர்கள் அதன் தொடர்பில் ஆலோசனை கூட்டங்களை நடத்திவருகின்றனர்.
2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த ப. சிதம்பரம் வியூகம்

