செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
bfa64920-0d30-43ff-abbf-f1e6d6fa4f50
-

பெகாசஸ் தொடர்பில் மம்தா பானர்ஜி பரபரப்புக் குற்றச்சாட்டு

கோல்கத்தா: பெகாசஸ் உளவு மென்பொருளைத் தயாரித்த இஸ்‌ரேலிய நிறுவனம் அதனை 25 கோடி ரூபாய்க்கு மேற்கு வங்க அரசுக்கு விற்க முயன்றதாக அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலைச் சேர்ந்த என்எஸ்ஓ நிறுவனம் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மேற்கு வங்கக் காவல்துறையை அணுகி பெகாசஸ் உளவு மென்பொருளை விற்க முன்வந்ததாகவும் தாம் அதை நிராகரித்துவிட்டதாகவும் மம்தா கூறினார். ஒவ்வொரு மாநிலத்தையும் அந்நிறுவனம் தொடர்புகொண்டதாகவும் ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு முதலமைச்சராக இருந்த போது பெகாசஸ் வாங்கப்பட்டதாகவும் மம்தா குற்றம் சாட்டினார்.

சந்திரபாபுவின் மகனும் தெலுங்கு தேசம் ஆட்சியில் ஆந்திராவின் தகவல் தொழில்நுட்ப அமைச்சராக இருந்தவருமான நரலோகேஷ், மம்தாவின் குற்றச்சாட்டைத் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

பெகாசஸ் உளவு மென்பொருளைச் சட்டவிரோதமாக பயன்படுத்தி 300க்கும் மேற்பட்டோர் உளவு பார்க்கப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

உக்ரேனில் இருந்து திரும்பிய மாணவர்களுக்கு மம்தா ஆதரவு

புதுடெல்லி: போர் காரணமாக உக்ரேனில் இருந்து திரும்பிய மருத்துவ மாணவர்களுக்கு மேற்கு வங்க மாநிலத்தின் மருத்துவக் கல்லூரிகளில் கல்வியைத் தொடர ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. இதற்கான கட்டணத்தையும் அரசே ஏற்கும் என்று மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

ரஷ்யா உக்ரேன் மீது தொடுத்துள்ள போரினால் படிப்பைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு தாயகம் திரும்பிய இந்திய மாணவர்கள் உள்நாட்டில் படிப்பைத் தொடரக் கோரிக்கை முன்வைத்துள்ளனர். நாட்டில் முதலாவதாக, தெலுங்கானா மாநிலம் அந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டுள்ளது. அதையடுத்து மேற்கு வங்க அரசும் மாணவர்களின் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

உக்ரேனில் இருந்து 390க்கும் அதிகமான மாணவர்கள் அண்மையில் மேற்கு வங்கம் திரும்பினர். அவர்களில் பெரும்பாலானோர் மருத்துவ மாணவர்கள்.

நாடளாவிய குடும்ப அட்டை திட்டத்தால் 77 கோடி பேர் பலன்

புதுடெல்லி: 'ஒரே நாடு; ஒரே குடும்ப அட்டை' திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் உள்ள 77 கோடி பேர் பலனடைவதாக மத்திய உணவு, பொது விநியோகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

வேறு மாநிலங்களுக்குப் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், குடும்ப அட்டையில் மாற்றம் ஏதும் செய்யாமல், அங்குள்ள நியாய விலைக் கடைகளில் பொருள்களை வாங்கிக்கொள்ளலாம். பின்னர் சொந்த ஊருக்குத் திரும்பும்போதும் அதேபோல் நியாயவிலைக் கடைகளில் பொருள் வாங்குவதில் சிக்கல் ஏதும் இருக்காது.

நாட்டின் 35 மாநிலங்களில் இந்தத் திட்டம் நடப்பில் உள்ளது என்றார் அமைச்சர் பியூஷ் கோயல்.

ஓராண்டில் 56 யூடியூப் செய்தி ஒளிவழிகள் முடக்கம்

புதுடெல்லி: மின்னிலக்க ஊடக நெறிமுறைகளை மீறியதன் தொடர்பில் கடந்த ஓராண்டில் யூடியூப் சார்ந்த 56 செய்தி ஒளிவழிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மத்திய தகவல், ஒலிபரப்பு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்குர் தெரிவித்துள்ளார்.

மின்னிலக்க ஊடகங்களில் செய்தி வெளியிடுவோருக்கான ஊடக நெறிமுறைகள் சென்ற ஆண்டு அறிவிக்கப்பட்டன. அவற்றை மீறியதன் தொடர்பில் அந்த ஒளிவழிகளின் சமூக ஊடகக் கணக்குகளை முடக்க தகவல், ஒலிபரப்பு அமைச்சு உத்தரவிட்டதாக அமைச்சர் கூறினார்.

2019ஆம் ஆண்டு செய்திகளின் உண்மைத்தன்மையைச் சரிபார்க்கும் பிரிவு அமைக்கப்பட்டதாகக் கூறிய அவர், போலிச் செய்திகளை அது கண்டறிவதாகக் குறிப்பிட்டார். பொதுமக்கள் முன்வந்து அளிக்கும் புகார்களின் அடிப்படையிலும் அது நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.