புதுடெல்லி: இந்தியா அதன் அண்டை நாடுகளுடன் கூடுதல் வர்த்தக, கலாசார உறவுகளை மேற்கொள்ள வேண்டும் என்று அந்நாட்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா (படம்) வலியுறுத்தி உள்ளார்.
இரு தரப்பு மக்களுக்கு இடையிலும் தொடர்புகள் மேம்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்திய எல்லைப் பகுதிகளில் உள்கட்டமைப்புகளை உருவாக்கி, பராமரிக்கும் 'எல்பிஏ' அமைப்பின் நிறுவனநாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு திரு அமித் ஷா உரையாற்றினார்.
ஆஃப்கானிஸ்தான், பாகிஸ்தான், சீனா, நேப்பாளம், பூட்டான், பங்களாதேஷ், மியன்மார் ஆகிய ஏழும் இந்தியாவின் அண்டை நாடுகள்.
அவற்றுடன் 15,000 கிலோமீட்டர் நீள எல்லையை இந்தியா பகிர்ந்துகொள்வதை அமைச்சர் சுட்டினார்.
அந்த நாடுகளுடன் கலாசார, மொழி ரீதிகளிலான பிணைப்பு இந்தியாவுக்கு இருப்பதாகக் கூறிய அவர், எல்லைப் பாதுகாப்பில் சமரசம் செய்துகொள்ளாமல் அந்த நாடுகளுடன் வர்த்தகத்தை அதிகரிக்க 'எல்பிஏ' அமைப்பால் முடியும் என்றார்.
15,000 கிலோமீட்டர் எல்லைப் பகுதியில் மாறுபட்ட சவால்களை இந்தியா சந்திக்கிறது.
அண்டை நாடுகளுடன் வர்த்தக, கலாசார உறவுகளை மேம்படுத்துதல் அதற்குத் தீர்வாக அமையும் என்று திரு அமித் ஷா குறிப்பிட்டார்.

