கொழும்பு: இலங்கையில் பொருளியல் நெருக்கடி அதிகரித்து வரும் நிலையில், அங்கு பெட்ரோல் வாங்க வரிசையில் காத்திருந்தபோது, இரண்டு ஆடவர்கள் உயிரிழந்தனர்.
இலங்கையில் வரலாறு காணாத அளவுக்கு விலைவாசி உயர்ந்துள்ளது. இதையடுத்து, பொதுமக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
பெட்ரோல், மண்ணெண்ணெய்க்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. கடந்த சில வாரங்களாக பொதுமக்கள் இவற்றை வாங்க விற்பனை நிலையங்களில் நீண்ட வரிசைகளில் காத்துக் கிடக்கின்றனர். நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மின்வெட்டு அமலில் உள்ளது.
இந்நிலையில், 70 வயதைக் கடந்த ஆடவர்கள் உயிரிழந்த தகவல் இலங்கை மக்கள் மத்தியில் கொந்தளிப்பை அதிகப்படுத்தி உள்ளது.
"இறந்த ஆடவர்களில் ஒருவர் 70 வயதான, மூன்று சக்கர வாகன ஓட்டுநர். அவர் நீரிழிவு, இதய நோயாளி ஆவார். இரண்டாவது ஆடவர் 72 வயதைக் கடந்த முதியவர்.
"இவ்விருவரும் சுமார் நான்கு மணி நேரத்துக்கு மேலாக விற்பனை நிலையத்தில் காத்துக்கிடந்த போது உயிரிழந்தனர்," என்று கொழும்பு காவல்துறை செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.
இதற்கிடையே, கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் இலங்கை அரசு கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாடுகளை நிறுத்திக்கொண்டது.
கையிருப்பில் இருந்த கச்சா எண்ணெய் முற்றிலுமாக தீர்ந்துவிட்டதை அடுத்து, சுத்திகரிப்பு நிலையப் பணிகள் முடிவுக்கு வந்தன.
சமையல் எரிவாயு விநியோகம் குறைந்துவிட்ட நிலையில், அதன் விலை வெகுவாக அதிகரித்ததால் மக்கள் மண்ணெண்ணெய் வாங்குவதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
இலங்கையில் தற்போது கடும் பொருளியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பல்வேறு நாடுகளிலும் இலங்கை அரசாங்கம் கடனுதவி அளிக்குமாறு கோரிக்கை விடுத்து வருகிறது.
முதல் கட்டமாக, இந்திய அரசிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று அண்மையில் இலங்கைக்கு இந்தியா உதவியது.
அந்த கடன் தொகையை வைத்து அத்தியாவசிய பொருள்களை வாங்க இருப்பதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
எனினும், அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் முடங்கி உள்ளதாக இலங்கை ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

