புதுடெல்லி: இந்தியாவில் உள்ள ஜப்பானிய நிறுவனங்களுக்கு தன்னால் இயன்ற அனைத்து உதவிகளையும் ஆதரவையும் வழங்க இந்திய அரசு கடமைப்பட்டுள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
முன்னேற்றம், செழிப்பு, கூட்டாண்மை ஆகியவைதான் இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகளின் அடிப்படை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்ற இந்தியா, ஜப்பான் இடையேயான உச்ச நிலை மாநாட்டில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இணையப் பாதுகாப்பு, திறன் மேம்பாடு, தகவல் பதிவு உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த இந்த ஒப்பந்தங்கள் வழி, இந்தியாவில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஜப்பான் சுமார் 42 பில்லியன் டாலர் முதலீடு செய்ய உள்ளது.
மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, இந்தியா, ஜப்பான் இடையேயான பொருளாதாரக் கூட்டுறவில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் இந்தியாவில் அதிக முதலீடுகளைச் செய்யும் நாடுகளில் ஜப்பானும் ஒன்று என்றும் குறிப்பிட்டார்.
பிரதமர் கிஷிடா இந்தியாவின் பழைய நண்பர் என்றும் ஜப்பானின் வெளியுறவு அமைச்சராக கிஷிடா இருந்தபோது அவருடன் கருத்துக்களை பரிமாறிக்கொள்ளும் வாய்ப்பு தமக்குக் கிடைத்தது என்றும் பிரதமர் மோடி நினைவுகூர்ந்தார்.
"பாதுகாப்பான, நம்பகமான, நிலையான எரிசக்தி விநியோகத்தின் முக்கியத்துவத்தை இந்தியாவும் ஜப்பானும் புரிந்துகொண்டுள்ளன. நிலையான பொருளாதார வளர்ச்சியை அடையவும் பருவநிலை மாற்றத்தை சமாளிக்கவும் இது அவசியம்," என்றார் பிரதமர் மோடி.
இந்தியாவில் தொழில் தொடங்க மேலும் பல ஜப்பான் நிறுவனங்கள் முன்வர வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

