புதுடெல்லி: கொரோனா தொற்று பாதிப்புக்கு அஞ்சி மருத்துவமனையில் பிரசவம் பார்த்துக்கொள்ள மறுத்ததால் மேகாலயாவில் 61 தாய்மார்கள் பலியாகி விட்டதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
மேலும், அங்கு உரிய மருத்துவக் கவனிப்பு இல்லாததால் 877 சிசுக்கள் உயிரிழந்ததும் தெரியவந்துள்ளது.
மேகாலயாவில் கர்ப்பிணிப் பெண்களும் பிறந்த குழந்தைகளும் அதிக அளவில் இறப்பது குறித்து தேசிய மனித உரிமை ஆணையம் கேள்வி எழுப்பி இருந்தது.
இதையடுத்து அம்மாநில அரசு இதுதொடர்பாக ஆணையத்தில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளது.
அதில், இறப்பு எண்ணிக்கை அதிகரிப்பது தொடர்பாக விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகவும் அப்போது பிரசவத்துக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதை பல பெண்கள் விரும்பவில்லை என்பது தெரியவந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
"இதையடுத்து அதிக ஆபத்துள்ள கர்ப்பிணிப் பெண்கள் கண்காணிக்கப்பட்டனர். அவர்களுக்கு வீட்டிலேயே பிரசவம் பார்க்கப்பட அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் இறப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது.
"இதேபோல் பச்சிளம் குழந்தைகளைக் கண்காணிக்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது," என மேகாலய அரசு மனித உரிமை ஆணையத்திடம் அளித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

