ஸ்ரீநகர்: இன்னும் சில ஆண்டுகளில் காஷ்மீரில் இருந்து துணை ராணுவப்படை விலக்கி கொள்ளப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
காஷ்மீரில் முழு அமைதியை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கை தமக்கு உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய ரிசர்வ் காவல் (சிஆர்பிஎஃப்) படையின் 83வது எழுச்சி நாள் அணிவகுப்பு ஸ்ரீநகரில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அமித் ஷா, முதன்முறையாக டெல்லியில் உள்ள சிஆர்பிஎஃப் தலைமையகத்திற்கு வெளியே, இந்த அணிவகுப்பு நடைபெறுகிறது என்றார்.
ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தானால் கட்டவிழ்க்கப்பட்ட பயங்கரவாதத்தை மத்திய படைகள் கட்டுப்படுத்தி உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இது மிகப்பெரிய பணி என்றார்.
"இன்னும் சில ஆண்டுகளில், இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களிலும் காஷ்மீரிலும் நக்சல்கள் இருக்கும் பகுதிகளிலும் மத்திய ரிசர்வ் காவல் படைக்கு (துணை ராணுவப்படை) வேலை இருக்காது.
"அங்கு நம்மால் முழு அமைதியை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அப்படி நடந்தால் அதற்கான மொத்த பெருமையும் துணை ராணுவப் படையினரையே சேரும்," என்றார் அமித் ஷா.
காஷ்மீரில் இருக்கும் பலத்த பாதுகாப்பு நீக்கி கொள்ளப்படுகிறது என்ற அறிவிப்பை மத்திய அரசு ஏற்கெனவே வெளியிட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அதற்கான கால அளவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டினார்.
பாதுகாப்புப் படையினர் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்தி வைத்திருப்பது என்பது இந்திய அரசியலமைப்பு பிரிவு 370 நீக்கப்பட்டதால் ஏற்பட்ட மிகப்பெரிய சாதனை என்றார் அமித் ஷா.
"காஷ்மீரில் ஜனநாயகம் செழுத்திட, அடிமட்ட அளவில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இங்கு ரூ.33,000 கோடி மதிப்பீட்டில் முதலீடுகள் செய்யப்பட உள்ளன. இங்குள்ள உள்ளாட்சி நிர்வாகம் ஊழலுக்கு எதிராகச் சிறப்பாகச் செயல்படுகிறது," என்றார் அமித் ஷா.
முன்னதாக அவர் ஜம்மு காஷ்மீர் பாதுகாப்பு நிலவரம் குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

