அசானி - அந்தமான் அருகே புதுப்புயல்
போர்ட்பிளேர்: அந்தமான் கடற்பகுதியில் உருவாகும் எனக் கணிக்கப்பட்டுள்ள புயலுக்கு அசானி எனப் பெயரிடப்பட்டுள்ளது. அந்தமான் தீவை நோக்கி புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி தொடர்ந்து நகர்ந்து வருகிறது என்றும் அதன் காரணமாக அங்கு பலத்த மழை பெய்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று காலை நிலவரப்படி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மட்டுமே காணப்பட்ட நிலையில், இன்று அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் பின்னர் புயலாகவும் வலுவடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
துணை அதிபர்: கல்வி முறையை இந்தியமயமாக்குவதே கல்விக்கொள்கை
புதுடெல்லி: கல்வி முறையை இந்தியமயமாக்க வேண்டும் என்பதுதான் இந்தியாவின் புதிய கல்விக் கொள்கையின் மையம் என துணை அதிபர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். இந்தியாவின் புதிய கல்விக் கொள்கை, தாய்மொழிகளை மேம்படுத்துவதற்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். "நமது பாரம்பரியம், கலாசாரம், முன்னோர்கள் குறித்து நாம் பெருமைப்பட வேண்டும். நமது முன்னோர்களின் பாதைகளுக்கு திரும்ப வேண்டும். நம் குழந்தைகளுக்கு அவர்களின் இந்திய அடையாளம் குறித்து பெருமை கொள்ள கற்றுக்கொடுக்க வேண்டும்," என்று துணை அதிபர் மேலும் கூறியுள்ளார்.
ரஷ்யாவிடமிருந்து 3 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா
புதுடெல்லி: ரஷ்ய எண்ணெய் நிறுவனத்திடம் இருந்து சலுகை விலையில் 3 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்பாக இந்திய ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இதற்கு அமெரிக்கத் தரப்பில் கடும் எதிர்ப்பு நிலவுவதாக ஊடகத் தகவல்கள் தெரிவித்த நிலையில், சட்டப்படியும் முறையான வழிமுறைகளையும் பின்பற்றித்தான் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கப்படுவதாக இந்தியத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவுடனான இந்த ஏற்பாடு இந்தியாவுக்குப் பல வகையிலும் லாபமாக அமைந்துள்ளதாக துறைசார் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்தின் கீழ் சிக்கி எட்டு பேர் பலி
பெங்களூரு: கர்நாடகாவில் தனியார் பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் எட்டு பேர் பலியாகினர். கர்நாடகாவின் துமகூரு மாவட்டத்தில் உள்ள ஒய்.என்.எஸ்.கோட்டையில் இருந்து பாவகடா பகுதி நோக்கிச் சென்ற ஒரு பேருந்தில், அமர இடம் கிடைக்காத சிலர், அதன் கூரை மீதேறி அமர்ந்து பயணம் செய்தனர். இந்நிலையில் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பேருந்து கூரையில் அமர்ந்திருந்தவர்கள் தூக்கி வீசப்பட்டனர். அவர்களில் பலர் சாலையோர முட்செடிகள் மீது விழுந்ததால் உதவி கேட்டு அலறினர். பலருக்கு கை, கால்கள் முறிந்த நிலையில், பேருந்துக்கு அடியில் சிக்கி எட்டு பேர் பலியாகினர். மேலும் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. பலியா னோர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது.

