சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டவர்கள் அம்மாநில முதல்வர் பகவந்த் மான் நிர்ணயித்துள்ள இலக்குகளை எட்டிப்பிடிக்க இயலாவிட்டால் பதவி விலகத் தயாராக இருக்க வேண்டும் என ஆம் ஆத்மி தலைமை ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் எச்சரித்துள்ளார்.
மக்களின் பணம் திருடப்படுவதை தம்மால் பொறுத்துக்கொள்ள இயலாது என்றும் அவர் கூறியுள்ளார்.
பஞ்சாப்பில் முதன்முறையாக ஆட்சியமைக்கிறது ஆம் ஆத்மி. இதையடுத்து முதல்வராக பகவந்த் மானும் பத்து அமைச்சர்களும் பதவியேற்றுள்ளனர்.
இதையடுத்து முதல்வர், அமைச்சர்கள், கட்சி எம்எல்ஏக்களுடன், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று முன்தினம் காணொளி வசதி மூலம் உரையாற்றினார்.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் தீவிரமாக செயல்பட வேண்டும் என அப்போது அவர் வலியுறுத்தினார். கட்சியின் 92 எம்எல்ஏக்களும் முதல்வர் பகவந்த் மான் தலைமையில் வலுவான அணியாக, நேர்மையுடன் பணியாற்ற வேண்டும் என்றார் கெஜ்ரிவால்.
"கட்சித் தலைவர்கள் ஏதேனும் தவறுகளில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். என்னால் எதையும் பொறுத்துக் கொள்ள முடியும். ஆனால், நேர்மையின்மை, மக்களின் பணத்தை திருடுவது ஆகியவற்றை மட்டும் ஏற்க முடியாது.
"இத்தகைய தவறுகளைச் செய்பவர்களுக்கு ஒரு வாய்ப்பு கூட வழங்கப்படமாட்டாது," என்றார் முதல்வர் கெஜ்ரிவால்.
பாஜகவில் உட்கட்சிப்பூசல் நிலவுவதாகக் குறிப்பிட்ட அவர், அதன் காரணமாகவே அக்கட்சியால் நான்கு மாநிலங்களில் வெற்றிபெற்றுள்ள போதிலும் இன்னும் ஆட்சியை அமைக்க முடியவில்லை என்றார்.
பஞ்சாப் சட்டப்பேரவையில் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் உடனடியாக பதவியேற்றுக் கொண்டதாகவும் நேரத்தை வீணடிக்காமல் ஆம் ஆத்மி ஆட்சி அமைக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்ட அவர், பஞ்சாப்பில் புதிய அரசு வேலை செய்யத் தொடங்கிவிட்டது என்றார்.
"ஒட்டுமொத்த நாடும் இப்போது பகவந்த் மான் பற்றிதான் பேசுகிறது. அக்டோபரில் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீட்டுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் நாள்களில் விவசாயிகளுக்கு காசோலைகள் வழங்கப்படும்.
"அரசாங்கத்தை அமைத்து மூன்று நாள்களுக்குள் நீங்கள் சிறப்பாகச் செயல்பட்டுள்ளீர்கள். பகவந்த் மானின் பணி குறித்து நான் மகிவும் பெருமைப்படுகிறேன்," என்றார் முதல்வர் கெஜ்ரிவால்.

