கொரோனா தொற்று: 25 ஆயிரம் பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை
புதுடெல்லி: நாடு முழுவதும் கொரோனா தொற்றுப் பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் புதிதாக 1,549 பேருக்கு கிருமி தொற்றியது என்றும் 31 பேர் உயிரிழந்துவிட்டதாகவும் மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை
516,510ஆகக் கூடியுள்ளது. நேற்று முன்தினம் 2,652 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். தற்போது 25,106 பேருக்கு மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது என சுகாதார அமைச்சின் அறிக்கை தெரிவிக்கிறது.
டெல்லியில் வழக்கத்தைவிட எட்டு டிகிரி அதிகம் பதிவான வெப்பநிலை
புதுடெல்லி: நாடு முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், தலைநகர் டெல்லியில் நேற்று முன்தினம் 38.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. இது இயல்பை விட சுமார் எட்டு டிகிரி அதிகம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அதேசமயம் குறைந்தபட்ச வெப்ப நிலையும் அங்கு ஐந்து டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது. இதற்கிடையே, டெல்லியில் காற்றின் தரம் மோசமாக உள்ளதாகவும் நேற்று முன்தினம் காற்றின் தரக்குறியீடு 247ஆக பதிவாகி உள்ளது என்றும் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்தது.
பெண் குழந்தையைப் பெற்றெடுத்ததால் மனைவிக்கு சூடுபோட்ட கணவர்
போபால்: பெண் குழந்தையைப் பெற்றெடுத்ததால் மனைவிக்கு இரும்புக் கம்பியால் சூடு போட்ட கணவரையும் அவரது குடும்பத்தாரையும் கைது செய்ய மத்தியப் பிரதேச காவல்துறை தேடி வருகிறது. அங்குள்ள நரியஹிடா கிராமத்தைச் சேர்ந்த லெட்சுமி என்ற 22 வயதுப்பெண்ணுக்கு கடந்த ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. இதனால் ஆண் குழந்தையை எதிர்பார்த்திருந்த அவரது கணவர் பப்லுவும் அவரது பெற்றோரும் ஏமாற்றமடைந்தனர். அதன் பின்னர் கணவரும் அவர் தம் குடும்பத்தாரும் லட்சுமியை தொடர்ந்து அடித்து, உதைத்து துன்புறுத்தியதாகத் தெரிகிறது. கொடுமையின் உச்சமாக லட்சுமியின் கை,கால்களில் இரும்புக் கம்பியால் சூடு வைத்துள்ளனர். இதுகுறித்து உறவினர் ஒருவருக்கு விவரம் தெரியவர, அவர் லட்சுமியை மீட்டதுடன், அவருக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து காவல்துறையிலும் புகார் அளித்தார். இதையடுத்து தலைமறைவான லட்சுமியின் கணவரது குடும்பத்தாருக்கு வலைவீசப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 3,097,721 மரங்கள் வெட்டப்பட்டன: அமைச்சர் தகவல்
புதுடெல்லி: கடந்த 2020-21ம் ஆண்டு வளர்ச்சி பணிகள், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக நாடு முழுவதும் பல்வேறு மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்களில் 3,097,721 மரங்கள் வெட்டப்பட்டு உள்ளன. இத்தகவலை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவ் மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் குறிப்பிட்டுள்ளார். மேலும், தலைநகர் டெல்லியில் மட்டும் கடந்த ஆண்டு ஒரு மரம் கூட வெட்டப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு 200 பதக்கங்கள்: ஹர்பஜன் விருப்பம்
சண்டிகர்: ஆம் ஆத்மி கட்சி சார்பாக மாநிலங்களவை எம்பி பதவிக்கு களமிறக்கப்பட்டுள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், ஒலிம்பிக் விளையாட்டில் இந்தியா பெறும் பதக்கங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் கவனம் செலுத்த விரும்புவதாக கூறியுள்ளார். நேற்று தமது வேட்புமனுவைத் தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பஞ்சாப் இளையர்களுக்கு விளையாட்டுத்துறை மீதான ஆர்வத்தை அதிகப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றார். "இந்தியாவைப் போன்ற ஒரு நாடு ஒலிம்பிக் போட்டியில் 200 பதக்கங்களாவது வெல்ல வேண்டும். இதை சாத்தியமாக்குவதற்கு என்னால் முடிந்ததைச் செய்வேன். விளையாட்டுத் துறையின் முன்னேற்றத்துக்காக பாடுபடுவேன்," என்றார் ஹர்பஜன் சிங். பஞ்சாப் மாநிலத்தில் விளையாட்டுத்துறை வளர்ச்சிக்கு ஹர்பஜன் உதவ வேண்டும் என அம்மாநில முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

