ஸ்ரீநகர்: காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டது போல, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி மீட்கப்படும் என மத்திய பிரதமர் அலுவலக விவகாரத்துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்கள் எதிர்பார்க்காத வகையில் மேற்கொள்ளப்பட்ட சில நடவடிக்கைகளைப் போல், ஆக்கிரமிப்பு காஷ்மீரும் மீட்கப்படும் என்று காஷ்மீரின் கத்துவா பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசியபோது அவர் குறிப்பிட்டார்.
"கடந்த 1980ஆம் ஆண்டு பாஜக தொடங்கப்பட்ட போது மத்தியில் ஆட்சியமைப்போம் என்று அக்கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். அப்போது பலர் அதைக் கிண்டல் செய்தனர். ஆனால், பாஜக தான் சொன்னதை செய்து காட்டியுள்ளது.
"மேலும், தான் அளித்த ஒவ்வொரு வாக்குறுதியையும் பாஜக அரசு நிறைவேற்றி வருகிறது," என்றார் அமைச்சர் ஜிதேந்திர சிங்.
370வது சட்டப் பிரிவு நீக்கப்படும் என்று சொன்னபோதும் மத்திய பாஜக அரசை பலர் கிண்டல் செய்ததாக குறிப்பிட்ட அவர், பாஜக சொன்னபடி செய்து காட்டியது என்றும் அதே போல் ஆக்கிரமிப்பு காஷ்மீரும் மீட்கப்படும் என்றும் தெரிவித்தார்.
"1994இல் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட ஜம்மு காஷ்மீர் பகுதிகளை விட்டு, பாகிஸ்தான் வெளியேற வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த வாக்குறுதியை பாஜகவின் மூத்த தலைவரும் முன்னாள் பிரதமருமான வாஜ்பாய் அளித்தார் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்," என்றார் அமைச்சர் ஜிதேந்திர சிங்.
ஜம்மு காஷ்மீரில் நடைபெற்று வரும் அனைத்து வளர்ச்சிப் பணிகளையும் பிரதமர் மோடி கண்காணித்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், பிரதமருக்கு காஷ்மீர் மக்களின் முழு ஆதரவு உண்டு என்றார்.

