இந்தியாவில் 19 வயது இளையர் ஒருவர் தினமும் வேலை முடிந்து வீட்டிற்கு ஓட்டப் பயணம் மேற்கொள்வதைக் காட்டும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவலாகி வருகிறது.
அவர் ஓடுவதோ ஒன்றல்ல இரண்டல்ல, 10 கிலோமீட்டர்.
திரைப்பட இயக்குநர் வினோத் கப்ரி, காரில் இருந்தவாறு இந்தக் காணொளியை எடுத்தார். டுவிட்டரில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள இந்தக் காணொளி இதுவரை 6 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.
இந்தியத் தலைநகர் புதுடெல்லிக்குப் புறநகரில் உள்ளது நொய்டா. அங்குள்ள மெக்டானல்ட்ஸ் உணவகத்தில் வேலை செய்துவிட்டு வீட்டிற்கு ஓடிக்கொண்டிருந்தார் பிரதீப் மேரா என்ற அந்த இளையர்.
வினோத்தின் காரைக் கடந்து ஓடிய பிரதீப்பை வீடு வரை காரில் அழைத்துச் சென்று இறக்கிவிட வினோத் முன்வந்தார். ஆனால், அவரது உதவியை ஏற்க பிரதீப் மறுத்தார்.
இந்திய ராணுவத்தில் சேர, வேலை முடிந்து தினமும் இரவில் வீட்டிற்கு ஓடுவதை தாம் வழக்கமாகக் கொண்டிருப்பதாக பிரதீப் கூறினார்.
காரை ஓட்டியவாறு பிரதீப்பை காணொளி எடுத்த வினோத், அவரைப் பற்றி மேலும் அறிய சில கேள்விகளைக் கேட்டார். ஓட்டத்தில் ஈடுபட்டவாறு அவற்றுக்கு பிரதீப் அளித்த பதில்கள், வினோத்தை ஆச்சரியப்பட வைத்தது.
இந்தக் காணொளி பரவலானால் என்ன செய்வீர் என்று வினோத் கேட்டதற்கு, "என்னை எவர் அங்கீகரிப்பார்? அது பரவலானால் பரவாயில்லை. ஏனெனில், நான் தவறு ஏதேனும் செய்யவில்லை," என்று பிரதீப் சிரித்துக்கொண்டே கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
இந்தக் காணொளியைக் கண்ட இணையவாசிகள், பல்லாயிரக்கணக்கான கருத்துகளைப் பதிவிட்டுள்ளனர். பிரதீப்பின் வைராக்கியத்தை அவர்கள் வெகுவாகப் பாராட்டினர்.
"உலகம் உன்னை அறியும், பிரதீப்," என்று டுவிட்டர் பயனாளர் ஒருவர் கருத்துரைத்தார்.


