புதுடெல்லி: உலக அளவில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் இந்தியாவிலும் பெட்ரோல் டீசல் விலை உயரும் என்றும் 5 மாநிலத் தேர்தலுக்குப் பின் இந்த உயர்வு இருக்கலாம் என்றும் பேசப்பட்டது.
எதிர்பார்த்தபடி, 137 நாட்களுக்குப் பின்னர் பெட்ரோல் விலை 76 காசு முதல் 80 காசுகள் வரை ஒவ்வொரு மாநிலத்திலும் நேற்று உயர்த்தப்பட்டது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 76 காசு உயர்ந்து 102 ரூபாய் 16 காசுக்கு விற்பனை செய்யப்பட்டது. டீசலும் 76 காசு உயர்த்தப்பட்டு 92.65 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. சமையல் எரிவாயு உருளை விலை 50 ரூபாய் உயர்ந்துள்ளது. 2021 நவம்பர் 4க்குப் பின்னர் முதன்முறையாக பெட்ரோல், டீசல் விலையும் 2021 அக்டோபர் 6க்குப் பிறகு எரிவாயு உருளை விலையும் உயர்ந்துள்ளன.
இந்நிலையில், இந்த விலை உயர்வைக் கண்டித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நேற்று எதிர்க்கட்சிகள் முழக்கம் எழுப்பின. மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, திமுக சார்பில் டி.ஆர்.பாலு ஆகியோர் விலையுயர்வைக் கண்டித்துப் பேசினர்.
ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேசுகையில், "ஐந்து மாநிலத் தேர்தல் முடிந்தவுடன் பெட்ரோல், டீசல், சமையல் சிலிண்டர் விலை உயரும் என்றே எதிர்பார்த்தோம். அது நடந்துவிட்டது," என்றார்.
கோல்கத்தா எம்.பி. சுதீப் பந்தோப்தயா பேசுகையில், "பெட் ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்," என்றார். தொடர்ந்து, காங்கிரஸ், திமுக, திரிணாமூல் காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், "தேர்தல் முடிந்துவிட்டது, விலைவாசி உயர்வு வந்துவிட்டது," என்று டுவிட்டரில் பதிவிட்டார்.
4½ மாதத்திற்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு

