கோல்கத்தா: மேற்கு வங்காள மாநிலத்தில் பழிக்குப்பழி வாங்கும் செயலில் 10 பேர் தீயில் கருகி மாண்டனர்.
பிர்பம் மாவட்டம் ராம்புரஹத் பகுதியில் உள்ள பகுடி கிராம துணைத் தலைவர் பது பிரதான் என்பவர் திங்கள்கிழமை கொலை செய்யப்பட்டார்.
மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டு வீசியதில் காயமடைந்த அவர் மருத்துவமனையில் மாண்டார். இதனைக் கேள்விப்பட்டு ஆத்திரமுற்ற அவரது ஆதரவாளர்கள் எதிர்த்தரப்பினர் குடியிருக்கும் பல குடிசைகளுக்கு தீ வைத்தனர். இதில் சுமார் 10 பேர் உயிரோடு எரித்துக் கொலை செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தகவல் அறிந்ததும் விரைந்துச் சென்ற தீயணைப்பு வீரர்களை சம்பவ பகுதிக்குள் நுழைய விடாமல் அந்தக் கும்பல் தடுத்துள்ளது.
சம்பவப் பகுதியில் குறைந்தபட்சம் 10 எரிந்த உடல்களைக் கண்டதாக சிலர் கூறினர்.
பல உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு கருகி விட்டதாகவும் ஒரு வீட்டிலிருந்து மட்டும் 7 உடல்கள் கைப்பற்றப்பட்டதாகவும் தகவல்கள் கூறின.
கொலை செய்யப்பட்ட கிராமத் துணைத் தலைவர் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.

