மம்தா: என் இதயம் நொறுங்கிப் போனது; குற்றவாளிகள் தப்பமுடியாது
கோல்கத்தா: மேற்குவங்கத்தில் எண்மர் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் பெரிய காரணம் மறைந்துள்ளதாகவும் கலவரத்தை தூண்டுவதில் தோல்வி கண்டவர்கள் இவ்வாறு கொடூரச் செயலில் ஈடுபட்டுள்ளதாகவும் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
அதேவேளையில் இந்தச் சம்பவத்தை நியாயப்படுத்த விரும்பவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கொடூர சம்பவம் நிகழ்ந்த பிர்பும் மாவட்டத்துக்கு நேரில் சென்ற முதல்வர் மம்தா, நவீன மேற்கு வங்கத்தில் இத்தகைய சம்பவம் நிகழும் எனத் தாம் சிறிதும் எதிர்பார்க்கவில்லை என்றார்.
மேற்குவங்க மாநிலம் பிர்பும் மாவட்டம் ராம்புராட் பகுதியில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் பஞ்சாயத்து தலைவர் பாதுஷேக் என்பவர் திங்கட்கிழமை இரவு மர்ம கும்பலால் கொல்லப்பட்டார்.
இதைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் உள்ள போக்டுய் என்ற கிராமத்தில் வீடுகளுக்குத் தீ வைக்கப்பட்டது. இதில் எட்டு பேர் எரித்துக் கொல்லப்பட்டனர்.
"நடந்த சம்பவத்தை என்னால் நம்ப முடியவில்லை. உங்கள் குடும்பத்தாரை இழந்து நிற்கிறீர்கள்.
"தாய்மார்களும் குழந்தைகளும் கொல்லப்பட்டுள்ளனர். எனது இதயம் நொறுங்கிப் போயுள்ளது," என்று இறந்தவர்களின் குடும்பத்தார், உறவினர்கள், கிராம மக்கள் மத்தியில் முதல்வர் மம்தா குறிப்பிட்டார்.
இந்தப் படுகொலைச் சம்பவம் தொடர்பாக காவல்துறை அனைத்து கோணங்களிலும் விசாரணை மேற்கொள்ளும் என்று உறுதியளித்த முதல்வர் மம்தா, குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
சம்பவ இடத்துக்கு காவல்துறை உயரதிகாரியை வரவழைத்த அவர், பொதுமக்களின் புகார்களின் பேரில் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருந்த காவல்துறையினர் தண்டிக்கப்பட வேண்டும் என்றார்.
"குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள் தப்பிவிட்டதாகக் காரணம் கூறாதீர்கள். குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும். சாட்சிகள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்பதால் உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்," என முதல்வர் மம்தா உத்தரவிட்டார்.
இதனிடையே, பிர்பும் கலவரம் தொடர்பாக கோல்கத்தா உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. கலவரம் நடந்த இடத்தில் மாவட்ட நீதிபதி முன்னிலையில், 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதற்கிடையே, பிர்பும் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகளை மன்னிக்கக் கூடாது எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
குற்றவாளிகளைக் கைது செய்ய மேற்கு வங்க அரசுக்குத் தேவையான உதவிகளை வழங்க மத்திய அரசு தயார் என்றும் அவர் கூறியுள்ளார். பெண்களும் குழந்தைகளும் உயிருடன் எரிக்கப்படுவதைவிட ஜனநாயகத்தில் வேதனை தரக்கூடியது வேறு எதுவும் இருக்க முடியாது என மேற்கு வங்க ஆளுநர் ஜக்தீப் தன்கர் கூறினார்.
இறந்தவர்கள் குடும்பத்துக்கு இரண்டு லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார் முதல்வர் மம்தா.

