புதுடெல்லி: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் தொடர்பான விஷயங்கள் முழுக்க முழுக்க இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்கள் என்று இந்திய அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
காஷ்மீர் விவகாரத்தில் கருத்து தெரிவிக்க, சீனா உட்பட எந்த நாட்டுக்கும் எவ்வித அதிகாரமும் இல்லை என மத்திய வெளியுறவு அமைச்சு கூறியுள்ளது.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளுடைய வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்ற கூட்டத்தில் சீன வெளியுறவு அமைச்சர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
அந்நிகழ்வில் பேசிய அவர், காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பல இஸ்லாமிய நண்பர்கள் சீனாவுடன் தொடர்ந்து பேசி வருவதாகவும் காஷ்மீர் விவகாரத்தில் சீனா நம்பிக்கையுடன் செயல்படுகிறது என்றும் தெரிவித்தார்.
மேலும், காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானும் அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற மற்ற நாடுகளின் தலைவர்களும் முன்வைத்த கருத்துகளை சீனா ஏற்றுக் கொள்வதாகவும் குறிப்பிட்டார்.
இதற்கு இந்தியா கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.
இந்தியா தனது உள்நாட்டுப் பிரச்சினைகள் பற்றி பொதுத் தரப்பில் விவாதிக்க விரும்பியதில்லை என மத்திய வெளியுறவுச் செயலாளர் அரிந்தம் பக்சி தெரிவித்துள்ளார்.
மேலும், சீன வெளியுறவு அமைச்சரின் கருத்துகளை இந்தியா முற்றிலுமாக நிராகரிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜம்மு, காஷ்மீர் ஆகிய இரு பகுதிகளுமே இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிகளாக உள்ளன என்றும் இந்நிலை நீடிக்கும் என்றும் அரிந்தம் பக்சி தெளிவுபடுத்தி உள்ளார்.
சீன வெளியுறவு அமைச்சர் விரைவில் இந்தியாவுக்கு அதிகாரபூர்வ பயணம் மேற்கொள்கிறார். இந்நிலையில், அவர் காஷ்மீர் விவகாரம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்துள்ளார்.

