உக்ரேன் விவகாரம்: இந்தியா, கிரீஸ் வெளியுறவு அமைச்சர்கள் பேச்சு
புதுடெல்லி: இந்தியா வந்துள்ள கிரீஸ் வெளியுறவு அமைச் சர் நிகோஸ் டென்டியாஸ், மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்துப் பேசினார். அப்போது உக்ரேன் விவ காரம் குறித்து இருவரும் விவாதித்ததாக ஊடகத் தகவல் கள் தெரிவிக்கின்றன. இருதரப்பு உறவுகளை மேம்படுத்து வது, ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலவரம் குறித்தும் பேசப்பட்டதாக ஊடகச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
320 கைப்பேசி செயலிகள் முடக்கம்
புதுடெல்லி: தேசப் பாதுகாப்புக்காக இதுவரை 320 கைப்பேசி செயலிகளை மத்திய அரசு முடக்கி உள்ளது. இத்தகவலை மத்திய வர்த்தக, தொழில்துறை இணையமைச்சர் சோம் பிரகாஷ் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். தகவல் தொழில் நுட்ப சட்டத்தின்கீழ் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் தேச பாதுகாப்புடன் தொடர்புள்ள அம்சங்களில் எந்தவித சமரசத்துக்கும் இடமில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
ப.சிதம்பரம், கார்த்திக்கு பிணை
புதுடெல்லி: ஏர்செல், மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகிய இருவருக்கும் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் பிணை வழங்கி உள்ளது. இருவருக்கும் ஏற்கெனவே வழங்கப்பட்ட முன்பிணை இனிமேல் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்பதால், புதிதாக பிணை மனு தாக்கல் செய்ய வேண்டும் என கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சிறப்பு நீதிமன்றம் அறிவித்தது. இதையடுத்து இருவரும் புதிய பிணை மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.
கவுன்சிலருக்குப் பால் அபிஷேகம்
புதுடெல்லி: டெல்லி சாஸ்திரி நகருக்குச் சென்ற ஆம் ஆத்மி கவுன்சிலர் ஹசீப் உல் ஹசன், அங்கு வசிக்கும் மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். அப்போது, சாக்கடை அடைப்பு காரணமாக பெரிதும் அவதிப்படுவதாக அங்குள்ள பெண்கள் தெரிவித்தனர். இதையடுத்து உடனடியாக தாமே களமிறங்கிய ஹசீப், சாக்கடை அடைப்புகளை நீக்கினார். இதையடுத்து அப்பகுதி மக்கள் அவருக்கு பாலால் அபிஷேகம் செய்து பாராட்டினர்.
நித்யானந்தா மீது புதுப் புகார்
பெங்களூரு: வெளிநாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் நித்யானந்தா மீது பாலியல் தொல்லை புகார் அளித்துள்ளார். எனினும் மின்னஞ்சல் மூலம் அவர் புகார் அனுப்பியதால் அதை ஏற்க இயலாது என கர்நாடக காவல்துறை தெரிவித்துள்ளது.
தலித் வங்கி அதிகாரி தாக்கப்பட்டார்
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' திரைப் படத்தை விமர்சித்ததால் ஆவேசமடைந்த ஒரு கும்பல் வங்கியில் பணியாற்றும் ஒரு தலித் அலுவலரைத் தாக்கியது. அவரைக் கோவிலுக்கு அழைத்து மன்னிப்புக் கேட்க வைத்ததாகவும் அவரது முகத்தை தரையில் தேய்த்து கொடுமைப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இது தொடர் பாக ஏழு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

