புதுடெல்லி: பாஜகவுக்கு தோல்விப் பயம் ஏற்பட்டுள்ளதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
இந்தப் பயம் காரணமாகவே டெல்லி மாநகராட்சித் தேர்தலை ஒத்திவைக்க அக்கட்சி முயற்சி செய்வதாக அவர் தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். மேலும், பாஜக தலைமைக்கு டெல்லி முதல்வர் சவாலும் விடுத்துள்ளார்.
டெல்லி மாநகராட்சி தேர்தலை உரிய நேரத்தில் நடத்தி, பாஜக வெற்றி பெறும் பட்சத்தில் ஆம் ஆத்மி கட்சியினர் அரசியலை விட்டு வெளியேறுவார்கள் என்று கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
உலகின் மிகப்பெரிய அரசியல் கட்சி என்று பாஜக தன்னைப் பற்றி பெருமையாகக் கூறிக்கொள்வதாகவும் அப்படிப்பட்ட கட்சி ஆம் ஆத்மி போன்ற சிறிய கட்சியை, சிறிய தேர்தலை எதிர்கொள்ள அஞ்சுகிறது என்றும் முதல்வர் கெஜ்ரிவால் விமர்சித்துள்ளார்.
சரியான நேரத்தில் மாநகராட்சித் தேர்தல் நடத்த பாஜகவுக்கு தாம் தைரியமூட்டுவதாகவும் அவர் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
"தோல்விப் பயத்தில் இன்று டெல்லி மாநகராட்சி தேர்தலை ஒத்தி வைக்கிறார்கள். நாளை மாநிலத் தேர்தல்கள், பின்னர் நாட்டின் பொதுத் தேர்தலையும் ஒத்திவைப்பார்கள்," என்று முதல்வர் கெஜ்ரிவால் மேலும் தெரிவித்துள்ளார்.

