பெங்களூரு: மனைவியின் விருப்பத்துக்கு எதிராக, கணவனால் வலுக்கட்டாயமாக பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும்போது, அதனை பாலியல் வன்கொடுமை என கூறலாம் என்று கர்நாடக உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கணவனின் செயலால் அப்பெண் மனதளவில் கடும் பாதிப்பை எதிர்கொள்வதாகவும் கணவர்மாரின் இத்தகைய செயல்கள் மனைவிகளின் ஆன்மாவைக் காயப்படுத்துகிறது என்றும் உயர் நீதிமன்ற நீதிபதி நாகபிரசன்னா குறிப்பிட்டார்.
கணவர் தம்மை பாலியல் வன்கொடுமை செய்ததாக மனைவி அளித்த புகார், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது, கணவருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டுகளை ரத்து செய்ய நீதிபதி மறுத்தார்.
கணவன் என்றால் மனைவியை ஆட்சி செய்பவர்கள் என்பது பிற்போக்குத்தனமான எண்ணம் என்றும் மனைவியின் விருப்பம் இன்றி நிகழ்த்தப்படும் பாலியல் உறவும்கூட பாலியல் வன்கொடுமைதான் என்றும் நீதிபதி நாகபிரசன்னா குறிப்பிட்டார்.
எனவே, கணவர் மீதான பாலியல் குற்றச்சாட்டை உறுதி செய்து 'பாலியல் வன்கொடுமை' என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்ய அவர் உத்தரவிட்டார்.
ஓர் ஆண் 18 வயதைக் கடந்துவிட்ட தன் மனைவியுடன் உடலுறவு கொள்வது பாலியல் வன்கொடுமையாகத் கருதப்படமாட்டாது என சட்டம் கூறுகிறது.
கடந்த 2018ஆம் ஆண்டு, இதேபோன்ற ஒரு வழக்கு குஜராத் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, மனைவி தாக்கல் செய்த பாலியல் வன்கொடுமை வழக்கை ரத்து செய்யுமாறு கணவர் தரப்பில் கோரப்பட்டது.
இதற்கான சட்டப்பிரிவைக் கணவர் தரப்பு சுட்டிக்காட்டியதை அடுத்து, அவர் மீதான முதல் தகவல் அறிக்கையை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. எனினும், திருமணம் என்கிற பெயரில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவோரை தண்டிக்க வேண்டிய அவசியத்தையும் அப்போது நீதிபதிகள் வலியுறுத்தினர்.
இந்நிலையில், திருமணம் என்பது ஆண்களுக்குள் இருக்கும் மிருகத்தை கட்டவிழ்த்து விடுவதற்கான சிறப்பு உரிமையல்ல என்று கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி நாகபிரசன்னா தமது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, சட்டம் இயற்றுபவர்கள் தற்போது மௌனக் குரல்களையும் கேட்டாக வேண்டிய நிலைமை உள்ளது என அவர் கூறியுள்ளார்.