சீன வெளியுறவு அமைச்சருடன் பேச்சு நடத்திய பிறகு இந்திய அமைச்சர் தகவல்
புதுடெல்லி: இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் நேற்று புதுடெல்லியில் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யியுடன் மூன்று மணி நேரம் பேச்சு நடத்தினார்.
அதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜெய்சங்கர், இந்தியா, சீனா இரு நாட்டு உறவு இப்போது வழக்கநிலையில் இல்லை என்றார். இரு நாட்டு எல்லையில் பிரச்சினை நிலவுவதே இதற்கான காரணம் என்று அவர் கூறினார்.
உறவு மேம்பட முயற்சிகள் இடம்பெறுகின்றன. இருந்தாலும் விரும்பிய அளவுக்கு முன்னேற்றம் இல்லை என்றாரவர்.
"இரு நாட்டு எல்லையில் 2020 ஏப்ரல் முதல் சீன ராணுவம் குவிக்கப்பட்டு வருகிறது. இதனால் பதற்றம், உறவில் உரசல்கள் ஏற்பட்டு இருக்கின்றன.
"இவற்றைச் சரிப்படுத்தி வழக்கமான நிலைக்கு உறவைக் கொண்டுவர இப்போதைக்கு இயலவில்லை," என்று கூறிய அமைச்சர், என்றாலும் இரு தரப்புகளுக்கும் இடையில் பல சுற்று பேச்சுவார்த்தை தொடர்வதைச் சுட்டினார்.
உக்ரேன் போர் பற்றியும் இரண்டு வெளியுறவு அமைச்சர்களும் விவாதித்தனர். பாகிஸ்தானில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சீன வெளியுறவு அமைச்சர், காஷ்மீர் பற்றி தெரிவித்த கருத்துகளுக்கு அவரிடம் தான் ஆட்சேபம் எழுப்பியதாகவும் ஜெய்சங்கர் நேற்றுத் தெரிவித்தார்.
சீன அமைச்சர் கடந்த 2020ஆம் ஆண்டுக்குப் பிறகு முதன் முறை யாக இப்போது இந்தியா வந்தார்.
இந்திய வருகைக்கு முன்னதாக அவர் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகளுக்குச் சென்றிருந்தார். இந்திய பயணத்தை முடித்துவிட்டு அவர் நேப்பாளம் செல்வார் என்றும் நேற்று தகவல்கள் கூறின.
சீன அமைச்சரின் இந்திய பயணம் குறித்து சீன அரசு சார்பிலோ, இந்திய அரசு தரப்பிலோ எந்த அதிகாரபூர்வமான அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
ஆப்கானிஸ்தானில் இருந்து அவரது விமானம் புறப்பட்ட பின்னரே அவரின் இந்திய வருகை பற்றி அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

