செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
c019225b-9f4c-4090-9064-69a2be9ac914
-

உக்ரேன்: 22,500 பேர் மீட்பு

புதுடெல்லி: உக்ரேனில் சிக்கித் தவித்த 22,500 இந்தியர்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக வெளியுறவு இணை அமைச்சர் மீனாட்சி லேகி தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் உறுப்பினர்களின் எழுத்துபூர்வ கேள்விக்குப் பதிலளித்த அவர், ரஷ்யத் தாக்குதலுக்கு ஆளாகியுள்ள உக்ரேனில் மேலும் 40 முதல் 50 இந்தியர்கள் வரை சிக்கியுள்ளனர் என மீனாட்சி லேகி கூறினார்.

பிஎம்கேர்ஸ்: மனு தள்ளுபடி

புதுடெல்லி: பிஎம்கேர்ஸ் சட்டபூர்வத் தன்மையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

பிஎம்கேர்ஸ் திட்டத்தின் கீழ் மக்களுக்குக் கிடைக்கும் பணம் தவறாக பயன்படுத்துவதாகக் கூறி அந்த மனுதாக்கல் செய்யப்பட்டது. அலகாபாத் உயர்நீதிமன்றம் ஏற்கெனவே மனுவைத் தள்ளுபடி செய்து இருந்தது. இதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது.

'பிரசாத மது' வாங்க போட்டி

அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள பாபா ரோட் ஷா என்ற கோயிலில் நடந்த ஒரு திருவிழாவில் பக்தர்களுக்குப் பிரசாதமாக மதுபானம் வழங்கப்படுகிறது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் போட்டி போட்டுக்கொண்டு 'பிரசாத மதுவை' வாங்கிக் குடிக்கும் காணொளி இணையத்தளத்தில் பரபரப்பாகி வருகிறது.

காசநோய் 19% அதிகரிப்பு

புதுடெல்லி: இந்தியாவில் 2021ஆம் ஆண்டில் காசநோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 19% அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

உலக காசநோய் தினத்தையொட்டி வியாழக்கிழமை மத்திய சுகாதார அமைச்சர் மான்சுக் மாண்டவியா அறிக்கை வெளியிட்டார். அதன்படி, 2021ஆம் ஆண்டில் 19,33,381 பேருக்குக் காசநோய் ஏற்பட்டது. காசநோய் அதிகரிப்புக்கு வறுமைதான் முக்கிய காரணம்.

'காசநோய் இல்லா இந்தியா 2025' என்ற ஒரு திட்டம் பற்றி பிரதமர் நரேந்திர மோடி 2018ஆம் ஆண்டு அறிவித்தார். என்றாலும் கொரோனா பாதிப்பு காரணமாக அதில் போதிய கவனம் செலுத்த முடியவில்லை என்றும் இருந்தாலும் அந்த இலக்கு நிறைவேற்றப்படும் என்றும் அறிக்கை குறிப்பிட்டது.

அதிவேக ஏவுகணை வெற்றி

போர்ட்பிளேர்: இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து பிரம்மோஸ் என்ற ஒலியைவிட மும்மடங்கு வேகத்தில் சீறிப் பாயக்கூடிய ஏவுகணைகளைத் தயாரித்து வருகின்றன. இந்த ஏவுகணைகளை நீர்மூழ்கிகள், போர்க்கப்பல்கள், போர் விமானங்கள், நிலத்தில் இருந்து ஏவ முடியும்.

தரையில் இருந்து தரை இலக்கைத் தாக்கி அழிக்கும் மேம்படுத்தப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை இந்தியாவில் கடந்த புதன்கிழமை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரயில்வே தனியார்மயம் இல்லை

புதுடெல்லி: இந்திய ரயில்வே துறையைத் தனியார்மயமாக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மாநிலங்களவையில் கூறினார். ரயில்வே துறையின் ஆற்றலைச் சாதிக்க மத்திய அரசுடன் மாநிலங்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றார் அமைச்சர்.

107 தளவாட இறக்குமதிக்கு தடை

புதுடெல்லி: இந்தியாவில் போர்க்கப்பல்கள், ஹெலிகாப்டர்கள், பீரங்கிகள், ராணுவப் போர் வாகனங்கள், ஏவுகணைகள், ரேடார்கள் ஆகியவற்றின் 107 உதிரி பாகங்கள், துணைக் கருவிகள் ஆகியவற்றை இறக்குமதி செய்ய தடை விதிக்க ராணுவ அமைச்சு இணங்கியது.

இந்தத் தடை வருகிற டிசம்பர் மாதம் முதல் 2028ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்வரை நடப்பில் இருக்கும். இந்திய நிறுவனங்களிடம் இருந்து மட்டுமே இந்தப் பொருள்களைக் கொள்முதல் செய்ய முடியும்.