கோல்கத்தா: இந்தியாவின் மேற்கு வங்காள நகரில் எட்டுப் பேர் உயிருடன் எரித்து கொல்லப்பட்ட சம்பவம் பற்றி சிபிஐ விசாரணை நடத்தும் என்று கோல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனை அடுத்து சிபிஐ குழுவினர் நேற்று சம்பவம் நிகழ்ந்த இடத்திற்குச் சென்றனர். அங்கு பல தடயங்களையும் அவர்கள் சேகரித்தனர். எட்டுப் பேரைக் கொண்ட அந்தக் குழுவுக்குக் காவல் துறையும் ஆதரவு அளித்தது.
மேற்கு வங்காளத்தில் ஆளும் கட்சியைச் சேர்ந்த பாது ஷேய்க் என்பவர் பீர்பூம் மாவட்டம் ராம்பூர்ஹாட், போக்டுய் என்ற தன்னுடைய கிராமத்தில் படுகொலை செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையில் அடையாளம் தெரியாத நபர்கள் அந்தக் கிராமத்தில் பல வீடுகளுக்கும் தீ வைத்துவிட்டனர்.
இம்மாதம் 21ஆம் தேதி நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில் எட்டுப் பேர் உயிருடன் எரிக்கப்பட்டு மாண்டுவிட்டனர். மாநிலம் முழுவதும் பெரும் கொந்தளிப்பு கிளம்பியதை அடுத்து கோல்கத்தா உயர் நீதிமன்றம் தானாகவே முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியது.
அந்தச் சம்பவம் பற்றிய விசாரணையை சிபிஐ நடத்த வேண்டும் என்று நேற்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதோடு, ஏப்ரல் 7ஆம் தேதிக்குள் விசாரணை அறிக்கை தாக்கலாக வேண்டும் என்றும் சிபிஐக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கிறது.
அந்தச் சம்பவம் பற்றி இப்போது சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரித்து வருகிறது. நீதிமன்ற உத்தரவை அடுத்து இதை இனி சிபிஐ விசாரிக்கும். இந்தத் தீர்ப்பு மேற்கு வங்காள ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரசுக்கு ஒரு பின்னடைவு என்று தகவல்கள் கூறின.

