புதுடெல்லி: இந்தியாவில் குற்றவியல் புலன்விசாரணை அமைப்பான சிபிஐ விசாரணை நடத்த பல மாநில அரசுகளும் ஒத்துழைப்பு அளிப்பதில்லை என்று மத்திய ஊழியர் நலத்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் நாடாளு மன்ற மாநிலங்களவையில் தெரிவித்தார்.
மிசோரம், மேற்கு வங்காளம், சத்திஸ்கர், ராஜஸ்தான், மராட்டியம், கேரளா, ஜார்க்கண்ட், பஞ்சாப், மேகாலயா ஆகிய ஒன்பது மாநிலங்கள், தங்கள் மாநிலத்தில் சிபிஐ விசாரணை நடத்துவதற்கான பொது ஒப்புதலைத் திரும்பப் பெற்றுக்கொண்டுவிட்டதாக அவர் கூறினார். இந்தியாவில் மகாராஷ்டிரா, பஞ்சாப், சத்திஸ்கர், மேற்கு வங்காளம், ராஜஸ்தான், ஆகிய 5 மாநிலங்களில் பாஜக அல்லாத அரசுகள் ஆட்சி நடக்கிறது.
இந்த மாநிலங்களில் ரூ.21,000 கோடி மதிப்புள்ள வங்கி மோசடிகள் நடந்துள்ளதாக பல்வேறு புகார்கள் தாக்கலாகி உள்ளன.
ஆனாலும் அந்த வழக்குகளைப் பற்றி சிபிஐ விசாரிக்க அந்த ஐந்து மாநில அரசுகளும் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை என்று அமைச்சர் தெரிவித்தார்.
கடந்த மூன்று ஆண்டுகளில் மொத்தம் 128 வேண்டுகோள் கடிதங்கள் அனுப்பி கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும் ஆனால் பதிலே இல்லை என்றும் அவர் கூறினார்.
மகாராஷ்டிரா மாநில அரசிடம் மட்டும் 101 வேண்டுகோள் கடிதங்கள் தாக்கலானதாகவும் இதுவரை ஒரு பதிலும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதனால், அந்த வழக்குகளில் சிபிஐ விசாரணையைத் தொடங்க முடியாத நிலை நிலவுவதாக அமைச்சர் வருத்தம் தெரிவித்தார்.

