புதுடெல்லி: வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களுக்கு இணையம் வழி வாக்களிக்கும் உரிமையை வழங்குவது குறித்து மத்திய அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருவதாக மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜ்ஜு தெரிவித்துள்ளார்.
மேலும், தேர்தலில் கள்ள வாக்குகள் பதிவாவதை தடுப்பது குறித்தும் ஆலோசிக்கப்படுவதாக அவர் நாடாளுமன்றத்தில் பேசியபோது குறிப்பிட்டார்.
"வெளிநாடுகளில் பணியாற்றும் இந்தியர்களுக்கு வாக்குரிமை அளிப்பது குறித்து ஆராய வேண்டிஉள்ளது. இந்த நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு தேர்தல் ஆணையத்தை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இணையம் மூலம் வாக்களிக்க அனுமதிப்பது குறித்து பரிசீலிக்கப்படும்.
"ஆனால், எந்த முடிவாக இருந்தாலும், அது ஒளிவுமறைவின்றிப் பாதுகாப்பானதாக இருப்பதை உறுதி செய்ய வேண்டி உள்ளது," என்றார் அமைச்சர் கிரண் ரிஜ்ஜு.
இந்திய தேர்தல் முறையை உலகமே பாராட்டுவதாகக் குறிப்பிட்ட அவர், தேர்தலில் அதிகமான வாக்குகள் பதிவாக வேண்டும் என்பதே மத்திய அரசின் விருப்பம் என்றார். எனினும் வாக்களிப்பதை கட்டாயமாக்குவதற்கான சட்டம் கொண்டு வரும் திட்டம் எதுவும் அரசின் பரிசீலனையில் இல்லை என்றார் அவர்.
"சிறையில் இருப்பவர்களை வாக்களிக்குமாறு மத்திய அரசு வற்புறுத்த முடியாது. ஏனென்றால் அவர்கள் நீதிமன்றத்தின் அதிகார வரம்புக்குள் இருப்பவர்கள்.
"தேர்தலில் கள்ள வாக்குகள் என்பது தீவிரமான பிரச்சினை. அதைத் தடுப்பது குறித்து மத்திய சட்ட அமைச்சு அளவில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
"வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பது அந்த வழிமுறைகளில் மிக முக்கியமான நடவடிக்கை," என்று அமைச்சர் கிரண் ரிஜ்ஜு மேலும் தெரிவித்துள்ளார்.
தேர்தலில் கள்ள வாக்குகள் பதிவாவதைத் தடுக்க 'ஒரே நாடு ஒரே வாக்காளர் பட்டியல்' என்ற முறையைப் பின்பற்றுவதுதான் நல்ல தீர்வாக அமையும் என்றும் இதுதான் மத்திய அரசின் விருப்பம் என்றும் அவர் கூறினார்.

