புதுடெல்லி: நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை ஐந்து நாள்களில் நான்காவது முறையாக அதிகரித்துள்ளது. இந்நிலையில், எரிபொருள் விலையேற்றத்திற்கு உக்ரேன் போர்ச் சூழலும் முக்கிய காரணம் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (படம்) தெரிவித்துள்ளார்.
2022ஆம் ஆண்டுக்கான நிதி மசோதா மக்களவையில் நேற்று முன்தினம் நிறைவேற்றப்பட்டது.
நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்துக்குப் பதிலளித்துப் பேசிய நிர்மலா சீதாராமன், எரிபொருள் விலையேற்றத்துக்கும் ஐந்து மாநிலத் தேர்தலுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்றார். ஆனால், எதிர்க்கட்சிகள் மத்திய அரசை இவ்வாறு சாடி வந்தன.
பொருளாதார மீட்சிக்காகவும் கொரோனா பேரிடருக்காக செலவிட்டதற்காகவும் பல வளர்ந்த நாடுகளும்கூட வரிகளை உயர்த்தி உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், மத்திய அரசு அது போன்று வரிகள் எதையும் உயர்த்தவில்லை என்றார்.
மேலும், எளிய மக்களின் சுமையைக் குறைப்பதில் அரசு உறுதியாக உள்ளதாகவும் மக்கள் மீது குறைந்த சுமையை மட்டுமே அரசாங்கம் சுமத்துகிறது என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
கடந்த 1951ஆம் ஆண்டு நாட்டின் உணவுப் பொருள் விலை உயர்வுக்கு கொரியா போரை அன்றைய பிரதமர் நேரு சுட்டிக்காட்டினார் என்றும் 1970ஆம் ஆண்டு, மறைந்த பிரதமர் இந்திரா காந்தி வருமான வரி விகிதத்தை கடுமையாக உயர்த்தினார் என்றும் நிர்மலா சீதாராமன் தமது உரையில் குறிப்பிட்டார்.
"கடந்த 1951இல், கொரியா போர் இந்தியாவின் பணவீக்கத்தைப் பாதிக்கும் என்று அன்றைய பிரதமர் நேரு கூறலாம். ஆனால், இன்றைய உலகமயமாக்கப்பட்ட இணைக்கப்பட்ட உலகில், உக்ரேன் போர் இந்தியாவைப் பாதிக்கிறது என்று நாங்கள் சொன்னால் அதை ஏற்க எதிர்க்கட்சியினர் மறுக்கிறீர்கள்.
"கூடுதல் சுமையை நாங்கள் கொண்டு வரவில்லை. எண்ணெய்ச் சந்தை நிறுவனங்கள் 15 நாள் சராசரியை அதிக விலையில் கொள்முதல் செய்கின்றனவெனில், அதை நாங்கள்தான் தாங்கிக்கொள்ள வேண்டும்," என்றார் அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
உலகளவில் கச்சா எண்ணெய் விநியோகச் சங்கிலியை உக்ரேன் போர் சீர்குலைத்துள்ளதாகவும் அதன் தாக்கம் அனைத்து நாடுகளிலும் பெரிதாக உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
"பிரதமர் மோடி தலைமையில், வரிகளைக் குறைத்து, சாமானிய மக்கள் மீதான சுமையைக் குறைக்க வேண்டும் என்று ஓர் அரசாங்கமாக நாங்கள் செயல்படுகிறோம். அதை தொடர்ந்து வெற்றிகரமாகச் செய்து வருகிறோம்," என்றார் நிர்மலா சீதாராமன்.
இதற்கிடையே நடப்பு மார்ச் 22 முதல் 26 வரையிலான ஐந்து நாள்களில் மட்டும் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.20 அதிகரித்துள்ளது. தலைநகர் புதுடெல்லியில் ஒரு லிட்டர் ரூ.98.61க்கும் மும்பையில் ஒரு லிட்டர் ரூ.113.35க்கும் விற்பனையானதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் தங்களின் சுமை தொடர்ந்து அதிகரித்து வருவதாக வாகனமோட்டிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
ஐந்து நாள்களில் நான்காவது முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு

