அச்சுத்தாள் பற்றாக்குறை: இலங்கை பத்திரிகை நிறுத்தப்பட்டது
புதுடெல்லி: அச்சுத்தாள் பற்றாக்குறை காரணமாக இலங்கையின் பிரபல 'தி ஐலண்ட்' நாளேடு சனிக்கிழமை அச்சிடப்படவில்லை. மேலும், அடுத்த அறிவிப்பு வரும் வரை அப்பத்திரிகை நிறுத்தப்படுவதாகவும் அறிவிக்கப் பட்டுள்ளது. இதுகுறித்து அப்பத்திரிகையின் ஆசிரியர் பிரபாத் சபந்து கூறுகையில், பத்திரிகைத்துறை கடும் நஷ்டங்களைச் சந்தித்து வருவதாகவும் விளம்பர வருமான மும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். "கடந்த 1981ல் பத்திரிகை ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து இதுவரை ஏப்ரல் புத்தாண்டுக் கொண்டாட்டத்திற்கு மட்டுமே பிரதியை அச்சிடாமல் விடுமுறை விட்டிருக்கிறோம். இன்னும் இரண்டு மாதங்களில் மொத்தமாகவே அச்சுத்தாள் இல்லாமல் போய்விடும். அரசாங்க கோப்புகளை அச்சிடக்கூட தாள் இருக்காது," என்று பிரபாத் சபந்து தெரிவித்துள்ளார். இதேபோல் திவயின சிங்கள பத்திரிகையும் அச்சுப்பிரதியை நிறுத்தியுள்ளது.
இங்கிலாந்து எம்பிக்கள் குழுவின் இந்திய வருகை நிறுத்திவைப்பு
புதுடெல்லி: இங்கிலாந்து நாடாளுமன்ற சபாநாயகர் தலைமையிலான பத்து எம்பிக்களைக் கொண்ட குழு இந்தியா வருவது கடைசி நேரத்தில் ரத்தானதாகவும் இந்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளே இதற்குக் காரணம் என்றும் ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
உக்ரேன் மீதான ரஷ்யாவின் தாக்குதலை நிறுத்த இந்தியா குரல் கொடுக்க வேண்டும் என பிரிட்டனும் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து அந்நாட்டுப் பிரதமர் அண்மையில் பிரதமர் மோடியைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியதாகவும் தெரிகிறது. இந்நிலை யில், பிரிட்டன் குழு இந்தியாவுக்கு வருகை தந்தால் உக்ரேன் விவகாரத்தில் நெருக்கடி அதிகரிக்கும் என புதுடெல்லி கருதியதால் கடைசி நேரத்தில் பயணம் நிறுத்தப்பட்டதாக ஊடகச் செய்தி கூறுகிறது.
மகளின் சடலத்தை 10 கி.மீ. தூரம் தோளில் சுமந்து சென்ற தந்தை
புதுடெல்லி: சத்தீஸ்கர் மாநிலம், ஆம்தாலா கிராமத்தைச் சேர்ந்த ஈஸ்வர் என்பவரின் மகள் காய்ச்சலால் பாதிக் கப்பட்டு உயிரிழந்தார். மகளை அருகில் உள்ள சுகாதார மையத்துக்கு அழைத்துச் சென்றபோது சிறுமி இறந்துவிட்டதாகக் கூறப்பட்டது. இதையடுத்து, ஆம்புலன்சில் மகளின் உடலை எடுத்துச் செல்ல ஈஸ்வர் நினைத்தபோது வேறொரு சடலத்தைக் கொண்டு செல்ல இருப்பதாக சுகாதார மையத்தில் கூறியுள்ளனர். இதனால் மகளின் சடலத்தை பத்து கிலோமீட்டர் தூரம் தன் தோளிலேயே தூக்கிச் சென்றார் ஈஸ்வர். இது குறித்த காணொளி இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

