கோல்கத்தா: மேற்குவங்கத்தில் எண்மர் கொடூரமாக எரித்துக் கொல்லப்பட்ட வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்ட நிலையில், இந்தக் குற்றத்துடன் தொடர்புடைய திரிணாமூல் காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் கைதாகி உள்ளார்.
அங்குள்ள பிர்பும் மாவட்டம், ராம்புராட் பகுதியில் நடந்த வன்முறைச் சம்பவங்களின்போது உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு அறிவிக்கப்பட்ட இழப்பீட்டுத் தொகை ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
கலவரம் தொடர்பாக இதுவரை 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். எனினும், ராம்புராட் பகுதி திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர் அனருல் ஹூசைனுக்கு கலவரத்தில் தொடர்புள்ளதாக ஊடகங்களில் தகவல் வெளியாகின.
காவல்துறை அவர் மீது நடவடிக்கை எடுக்க தயங்குவதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில், அவரைக் கைது செய்ய முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டார்.
உயிரிழந்த எட்டு பேரில் மூவர் பெண்கள், இருவர் சிறார்கள் ஆவர்.
இதைக் குறிப்பிட்டு நேற்று முன்தினம் மாநிலங்களவையில் பேசிய பாஜக எம்பியும் திரைப்பட நடிகையுமான ரூபா கங்குலி, மேற்கு வங்கத்தில் மக்கள் கொத்து கொத்தாக கொலை செய்யப்படுவது சாதாரணமாகிவிட்டது என்று சாடினார்.
"நாம் எல்லாரும் மனிதர்கள். கல்மனம் கொண்ட அரசியலை நாம் நடத்தவில்லை," என்றார் ரூபா.
உணர்ச்சிபூர்வமாகப் பேசிய அவர் திடீரென கதறி அழுதார். அவரை மற்ற உறுப்பினர்கள் ஆசுவாசப்படுத்தினர்.

