அமராவதி: திருமண நிச்சயதார்த்தத்துக்குச் சென்ற பேருந்து ஐம்பது அடி ஆழமுள்ள பெரிய பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஏழு பேர் பலியாகினர்.
மேலும் 45 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சோகச் சம்பவம் ஆந்திர மாநிலத்தில் நேற்று முன்தினம் நிகழ்ந்துள்ளது.
அங்குள்ள அனந்தபூர் மாவட்டம் தர்மாவரத்தில் இருந்து சித்தூர் மாவட்டம் நகரி அருகே உள்ள கிராமத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற இருந்தது.
இதில் பங்கேற்க ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் தனியார் பேருந்தில் சென்றுகொண்டிருந்தனர். நேற்று முன்தினம் இரவு சுமார் 11.30 மணியளவில் பாக்கராப்பேட்டை மலைப்பாதையில் சென்றபோது அதிக வேகம் காரணமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அப்பேருந்து சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில் சம்பவ இடத்திலேயே ஏழு பேர் பலியாகினர். கும்மிருட்டில் விபத்தில் சிக்கியவர்களின் அழுகுரலை வைத்தே அவர்கள் இருக்கும் இடத்தை உத்தேசமாகக் கணக்கிட்டு மீட்புக் குழுவினர் 45 பேரை மீட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

