புதுடெல்லி: பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு எத்தனை பண்டிட்டுகளை பாஜக காஷ்மீரில் மறு குடியமர்த்தியுள்ளது என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் (படம்) கேள்வி எழுப்பியுள்ளார்.
"தி காஷ்மீர் ஃபைல்ஸ்" திரைப்படத்தின் மூலம் பாஜக சுமார் 200 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளது என்றும் ஒருவரது சோகத்தை வைத்து பணம் சம்பாதிப்பது குற்றச்செயல் என்றும் அவர் காட்டத்துடன் கூறியுள்ளார்.
பாஜகவின் இத்தகைய செயல்பாட்டை நாடு பொறுத்துக்கொள்ளாது என்றார் அவர்.
'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இப்படத்தை பாஜகவினர் வரவேற்றுள்ளனர்.
காஷ்மீரில் இருந்த பண்டிட் இன மக்கள் அங்கிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதை இந்தப் படம் சித்திரிப்பதற்காக பாஜகவினர் கூறுகின்றனர்.
கடந்த காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் காஷ்மீரில் பயங்கரவாதம் எப்படி வளர்ந்தது என்பதை அறிய இந்தப் படத்தை அனைவரும் பார்க்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.
இந்நிலையில், இப்படம் குறித்து ஆம் ஆத்மி தலைமை ஒருங்கிணைப்பாளருமான கெஜ்ரிவால் கருத்து தெரவித்துள்ளார்.
"கடந்த 25 ஆண்டுகளில், காஷ்மீரி பண்டிட்டுகள் வெளியேறியதில் இருந்து, கடந்த 8 ஆண்டுகள் உட்பட 13 ஆண்டுகளாக மத்தியில் பாஜக அரசு உள்ளது. இந்த காலகட்டத்தில் எத்தனை காஷ்மீரி பண்டிட்டுகளின் குடும்பங்களை பாஜக அங்கு மறு குடியமர்த்தியுள்ளது?
"ஒரு குடும்பம்கூட காஷ்மீருக்குத் திரும்பவில்லை. காஷ்மீர் பண்டிட்டுகள் தங்கள் வீடுகளுக்குத் திரும்புவதை உறுதிசெய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்," என்று முதல்வர் கெஜ்ரிவால் மேலும் தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் பண்டிட்டுகளின் நிலையை நாடு முழுவதும் மக்கள் புரிந்துகொள்ளும் வகையில் இந்தப் படத்தை இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் அதன் மூலம் கிடைக்கும் பணத்தை பண்டிட்டுகளின் நலனுக்காகச் செலவிட வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.

