இந்தியாவிலேயே மருத்துவக் கல்வியை இந்தி மொழியில் வழங்கும் முதல் மாநிலமாக மத்தியப் பிரதேசம் ஆகவுள்ளது.
இது தொடர்பாக, நேற்று ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 27), அம்மாநில தலைநகர் போபாலில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், "இந்த ஆண்டு முதல், மத்தியப் பிரதேசத்தில் உள்ள இளநிலை மருத்துவப் படிப்பு (எம்.பி.பி.எஸ்) இந்தி மொழியில் கற்பிக்கப்படவுள்ளது. இப்படிப்பை இந்தியில் வழங்கும் முதல் மாநிலம் மத்தியப் பிரதேசம் ஆகும்," என்று தெரிவித்துள்ளார்.
"அதற்காக இந்தி மொழியில் பாட நூல்கள் தயாராகி வருகின்றன. இந்த ஆண்டு முதல் இந்தி மொழியில் மருத்துவப் படிப்பு தொடங்கப்படும். அதைத் தொடர்ந்து, இதேபோன்று இந்தி மொழியில் பொறியியல் கல்வியும் மற்ற தொழில் படிப்புகளும் தொடங்கப்படும். மற்ற நாடுகள் தொழில் கல்விக்கு தங்கள் தாய்மொழியைப் பயன்படுத்தும்போது நாம் ஏன் ஆங்கிலத்திற்கு அடிமையாக இருக்க வேண்டும்?" என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
கிராமங்கள் மற்றும் நகரங்களில் இந்தி பேசும் பின்னணியில் இருந்து வரும் நடுத்த, வசதிகுறைந்த மக்களிடையே நிலவும் தாழ்வு மனப்பான்மையை நீக்க இந்தப் புதிய நடைமுறை உதவும் என்று சிவராஜ் சிங் சவுகான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


