புதுடெல்லி: வங்கிகளில் கடன் பெற்று ஏமாற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
முந்திய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் கடனை திருப்பிச் செலுத்தாதவர்களிடம் இருந்து பணம் திரும்ப பெறப்படவில்லை என்றும் நாடாளுமன்றத்தில் பேசும்போது அவர் குறிப்பிட்டார்.
நாட்டில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் கடன் பெற்ற பலர் அதை திருப்பிச் செலுத்தாமல் ஏமாற்றியதாக பல்வேறு வழக்குகள் பதிவாகி உள்ளன. கடனைத் திருப்பிச் செலுத்தாமல் வெளிநாடுகளுக்கு சிலர் தப்பிச் சென்றுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இவ்வாறு கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்கள் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து திமுக உறுப்பினர் டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதிலளித்துப் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கடன் பெற்று ஏமாற்றியவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது முதல் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.
"பிரதமர் மோடி தலைமையிலான அரசுதான் முதன்முறையாக வங்கிகளில் கடன் பெற்று திரும்ப செலுத்தாதவர்களிடம் இருந்து பணத்தை வசூலித்துள்ளது.
"திரும்ப வராத கடன்களைத் தள்ளுபடி செய்வது என்பது முழுமையான தள்ளுபடி என்று அர்த்தமல்ல. வங்கிகள் ஒவ்வொரு கடன்கள் மீதும் நிலுவைத் தொகையை வசூலித்து வருகின்றன.
"பொதுத்துறை வங்கிகள் கடனைச் செலுத்தாதவர்களிடம் இருந்து சொத்துகளை கையகப்படுத்தி உள்ளன. இது போன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்," என்றார் அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

