செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
170937f0-ea47-4fb3-8b14-405638711608
-

எதிரி போர் விமானங்களைத் தாக்கும் ஏவுகணைகள் பரிசோதனையில் வெற்றி

புவனேஸ்வர்: எதிரிகளின் போர் விமானங்களை துல்லியமாகத் தாக்கும் இந்திய ராணுவ ஏவுகணைகள் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. நேற்று முன்தினம் ஒடிசா மாநிலத்தில் உள்ள சந்திபூர் ஏவுகணை தளத்தில் இந்தச் சோதனை நடத்தப்பட்டுள்ளது. மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் ராணுவ ஆராய்ச்சி, மேம்பாட்டு நிறுவனமான டிஆர்டிஓ., இஸ்ரேல் ஏரோ ஸ்பேஸ் ஆகியவை இணைந்து இந்த ஏவுகணைகளை வடிவமைத்துள்ளதாகவும் அதிவேகமாகச் செல்லும் எதிரிகளின் போர் விமானங்களை இந்த ஏவுகணைகள் துல்லியமாக வீழ்த்தும் திறன் கொண்டவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்முவில் கடந்த 76 ஆண்டுகளில் இல்லாத வெப்ப நிலை பதிவானது

ஸ்ரீநகர்: கோடை காலம் நெருங்கி வரும் நிலையில் ஜம்மு, காஷ்மீரில் அண்மைய சில தினங்களாக வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஜம்முவில் நேற்று முன்தினம் 37.3 டிகிரி செல்சியசாக வெப்பநிலை பதிவானது. இது கடந்த 76 ஆண்டுகளில் இல்லாத ஆக அதிகமான வெப்ப நிலையாகும். கடந்த மார்ச் 31, 1945 அன்று ஜம்முவில் அதிகபட்சமாக 37.2 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை பதிவானதாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் சோனம் லோட்டஸ் தெரிவித்துள்ளார்.

இந்தியில் மருத்துவக் கல்வி

போபால்: இந்தியாவிலேயே மருத்துவக் கல்வியை இந்தி மொழியில் வழங்கும் முதல் மாநிலமாக மத்தியப் பிரதேசம் பெயர் எடுக்க உள்ளது. இந்த ஆண்டு முதல் அங்கு இளநிலை மருத்துவப் படிப்பு (எம்பிபிஎஸ்) இந்தி மொழியில் கற்பிக்கப்படவுள்ளதாக அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதற்கான பாட நூல்கள் இந்தி மொழியில் தயாராகி வருவதாகவும் இதேபோன்று இந்தி மொழியில் பொறியியல் கல்வியும் மற்ற தொழில் படிப்புகளும் தொடங்கப்படும் என்றும் அவர் கூறினார். பல நாடுகள் தொழில் கல்விக்கு தங்கள் தாய்மொழியைப் பயன்படுத்தும்போது இந்தியா மட்டும் ஏன் ஆங்கிலத்திற்கு அடிமையாக இருக்க வேண்டும்?" என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

விமானங்கள் மீது பறவைகள் மோதும் சம்பவங்கள் அதிகரிப்பு

புதுடெல்லி: இந்தியாவில் விமானங்கள் மீது பறவைகள் மோதும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. நாட்டின் பல்வேறு பகுதிகளில் விமான நிலைய ஓடுபாதைகளில் நாய்களின் தொல்லையும் அதிகரித்துள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு நாடு முழுவதும் 1,227 பறவைகள், 13 விலங்குகள் மோதல் சம்பவங்கள் பதிவாகி உள்ளன. கடந்த ஆண்டில் விமானங்களின் மீது 1,466 பறவை மோதல் சம்பவங்களும் (27.25% அதிகரிப்பு), 29 விலங்குகள் மோதல் சம்பவங்களும் (93.33% அதிகரிப்பு) நடந்துள்ளன.