செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
e797017e-2164-4eef-8b76-ec9c34aa1581
-

மூன்று எரிவாயு உருளை இலவசம்

பனாஜி: கோவா சட்டசபைத் தேர்தலையொட்டி, தாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு மூன்று எல்பிஜி எரிவாயு உருளைகள் இலவசமாக வழங்கப்படும் என்று பாஜக தேர்தல் சமயத்தில் வாக்குறுதி அளித்திருந்தது.

அதன்படி, கோவா முதல்வராக இரண்டாவது முறையாகப் பதவியேற்றுக்கொண்டுள்ள பிரமோத் சாவந்த், இல்லத்தரசிகளுக்கு மூன்று சமையல் எரிவாயு உருளைகளை இலவசமாக வழங்கும் திட்டத்தை செயல் படுத்த உள்ளதாக டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

பாஜகவை எதிர்க்க மம்தா அழைப்பு

கோல்கத்தா: நாட்டின் ஜனநாயகத்தின் மீது பாஜக நேரடி தாக்குதல் நடத்தி வருவது கவலை தருவதாக தெரிவித்துள்ள மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, அடக்குமுறையை கட்டவிழ்த்துவிடும் பாஜகவை ஒரு கட்டுக்குள் கொண்டுவர எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். தலைவர்கள் சந்திப்புக்கான இடத்தையும் நேரத்தையும் முடிவு செய்து விரைவில் ஆலோசனை நடத்தவும் அழைப்பு விடுத்துள்ளார்.

வங்கி மோசடிகள் மூலம் ஒவ்வோர் நாளும் ரூ.100 கோடி இழப்பு

மும்பை: வங்கி மோசடிகள் மூலம் இந்தியாவில் நாள்தோறும் ரூ.100 கோடி அளவுக்கு இழப்பு ஏற்படுவதாக ரிசர்வ் வங்கி அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.

இவ்வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் கடந்த ஏழு ஆண்டுகளில் வங்கி மோசடிகள் மூலம் 250,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நம்பிக்கை மோசடி, கணக்குகளில் திருத்தம், ஊழல் உள்ளிட்ட எட்டு வகையான மோசடிகள் குறித்தும் ரிசர்வ் வங்கி பட்டியலிட்டுள்ளது.

நிதி தலைநகர் என்று அழைக்கப்படும் மும்பை மாநகரம் இடம்பெற்றுள்ள மகராஷ்டிர மாநிலத்தில்தான் மொத்த தொகையில் 50% மோசடி நடந்துள்ளதாகக் கூறப்பட்டு உள்ளது. இதற்கு அடுத்ததாக டெல்லி, தெலுங்கானா, குஜராத், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் வங்கி மோசடி புகார்கள் அதிகம் பதிவாகி உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

ரூ.7½ கோடி தங்கம் பறிமுதல்

புதுடெல்லி: டெல்லி அனைத்துலக விமான நிலையத்தில் நைரோபியில் இருந்து வந்திறங்கிய இரு ெகன்ய பயணிகளிடம் நடத்திய சோதனையில், ஏழரைக் கோடி ரூபாய் மதிப்பிலான தங்கத்தைச் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து, அவர்களிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். கடத்தி வரப்பட்ட 15.57 கிலோ எடை கொண்ட நகைகளில் 19 தங்கக் கட்டிகளும் இருந்தன.