மாஸ்கோ: உக்ரேனில் இருந்து நாடு திரும்பிய இந்திய மாணவர்களைத் தங்கள் நாட்டு பல்கலைக்கழகங்களில் சேர்த்துக்கொள்ள ரஷ்யா விருப்பம் தெரிவித்துள்ளது.
"மாணவர்கள் கல்விக்கட்டணம் எதுவும் கூடுதலாகச் செலுத்தத் ேதவையில்லை," என்றும் அது மேலும் கூறியுள்ளது.
ரஷ்யாவின் இந்த அறிவிப்பால் தங்கள் எதிர்காலம் கேள்விக்குறி யாகி விட்டது என்ற வருத்தத்தில் இருந்த மாணவர்களுக்கு பேருதவியாக இருக்கும் எனவும் கூறப் படுகிறது.
உக்ரேன் மீது ரஷ்யா தொடுத்து வரும் போர் காரணமாக, அந்நாட்டில் இருந்து ஏராளமானோர் அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர்.
அத்துடன், உக்ரேனின் உயர்கல்வி நிலையங்களில் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட பிரிவுகளில் பயின்று வந்த 20,000க்கும் ேமற்பட்ட இந்திய மாணவர்களையும் மத்திய அரசு மீட்டுள்ளது.
இவர்களில் பெரும்பாலானோர் தங்களது எதிர்காலம் கேள்விக்குறியானதால், தங்களது கல்வியை இந்தியாவிலேயே தொடர மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.
இதுதொடர்பாக மத்திய அரசும் ஆலோசித்து வந்தது.
இந்நிலையில், இந்தியாவுக்குத் திரும்பிய மாணவர்களைத் தங்கள் நாட்டில் படிப்பைத் தொடரும்படி ரஷ்யா அழைத்துள்ளது.
இதற்காக, ரஷ்யா, கிரீமியாவில் உள்ள ரஷ்யப் பல்கலைக்கழகங்கள் மருத்துவ மாணவர்கள், பேராசிரியர்களை அணுகியுள்ளன.
கூடுதல் கட்டணம், நுழைவுத்தேர்வு இன்றி தங்கள் பல்கலைக்கழகங்களில் மாணவர்களைச் சேர்த்துக்கொள்வதாக ரஷ்யப் பல்கலைக்கழகங்கள் அறிவித்துள்ளன.
இதற்கிடையே, உக்ரேனில் இருந்து மால்டோவாவுக்குச் சென்று, அங்குள்ள அரசு மருத்துவப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து இதுவரை 140 மாணவர்கள் கல்வியைத் தொடர்வதாக பேராசிரியர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.

