மும்பை: பிரதமர் நரேந்திர மோடியைக் கொல்ல சதித்திட்டம் தயாராகிவிட்டதாக இந்தியப் புலனாய்வு அமைப்பிற்கு (என்ஐஏ) மிரட்டல் மின்னஞ்சல் வந்துள்ளதால் பாதுகாப்பு அமைப்புகள் விழிப்படைந்து உள்ளன.
அந்தச் சதித்திட்டம் அம்பலமாகிவிடக்கூடாது என்பதால் தன் உயிரை மாய்த்துக்கொள்ளப் போவதாகவும் அந்த மின்னஞ்சலை அனுப்பியவன் குறிப்பிட்டுள்ளதாக 'இந்தியா டிவி' செய்தி தெரிவித்தது.
பிரதமரைக் கொல்வதற்காக குறைந்தது 20 'ஸ்லீப்பர் செல்கள்' முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் அவர்களிடம் 20 கிலோ 'ஆடிஎக்ஸ்' வெடிமருந்து இருப்பதாகவும் அவன் கூறியுள்ளான்.
சதித்திட்டம் தீட்டப்பட்டுவிட்டதாகவும் சரியான நேரத்திற்காகக் காத்திருப்பதாகவும் பல்வேறு பயங்கரவாதக் குழுக்களுக்கும் அதில் தொடர்பிருப்பதாகவும் அவன் தனது மின்னஞ்சலில் குறிப்பிட்டுள்ளான்.
இம்மின்னஞ்சலைப் பெற்ற 'என்ஐஏ'வின் மும்பைப் பிரிவு, அதனை மற்ற அமைப்புகளுடன் பகிர்ந்துகொண்டதாகவும் கூறியது. இதனைத் தொடர்ந்து, எங்கிருந்து அந்த மின்னஞ்சல் அனுப்பப்பட்டது என்பதைக் கண்டறியும் பணியை இணையப் பாதுகாப்பு அமைப்பு தீவிரப்படுத்தியுள்ளது.