புதுடெல்லி: இவ்வாண்டின் முதல் இரண்டு மாதங்களில் இந்தியாவில் விமான நிலைய ஓட்டுநர்கள், தீயணைப்பாளர்கள், விமானப் பராமரிப்பு ஊழியர்கள் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர் மது அருந்திவிட்டு பணிக்கு வந்தது கண்டறியப்பட்டது.
இந்தியாவின் சிவில் விமானப் போக்குவரத்து தலைமை இயக்ககம் முன்னெடுத்த திட்டத்தின்கீழ் இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட், இந்தியன் ஆயில் ஆகிய நிறுவனங்களைச் சேர்ந்த பராமரிப்பு ஊழியர்கள் மதுஅருந்திவிட்டு வேலைக்கு வந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக இந்த விவகாரம் குறித்து அறிந்த ஒருவர் கூறினார். முதல்முறை குற்றம் புரிவோர் பணியிடைநீக்கம் செய்யப்படுவர், மறுபடியும் குற்றம் புரிவோர் விமான நிலையங்களில் பணிபுரிவதற்கான அனுமதி ரத்து செய்யப்படும் என்று அவர் கூறியதாக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது. இத்தகவல் பொது வெளியில் வெளியிடக்கூடியது அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மூச்சுக்காற்று மூலம் ஒருவர் மது அருந்தி உள்ளாரா என்பதை சோதிக்கும் கருவி கொண்டு விமானிகள் தங்கள் பயணத்துக்கு முன்பு பரிசோதிக்கப்படுவர். தற்போது விமானப் பராமரிப்பு ஊழியர்களும் இந்தப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.
அத்தகைய பரிசோதனை நடவடிக்கையின்போதே மேற்குறிப்பிட்ட ஊழியர்கள் சிக்கினர்.
மூச்சுக்காற்றில் மதுவின் அளவைக் கண்டறியும் பரிசோதனைகளுக்கு அதிகமான விமான நிலைய ஊழியர்களை உட்படுத்த டிசம்பரில் வழிகாட்டி நெறிமுறைகளை இந்தியா திருத்தி அமைத்திருந்தது.
விமானப் பராமரிப்பு ஊழியர்களும் பரிசோதனை, கணக்குத் தணிக்கை, அல்லது பயிற்சிக்காக விமானி அறைக்குச் செல்லும் அனைவரும் இதற்கு உட்படுத்தப்பட்டனர்.
கடந்த ஜனவரி மாதம் இண்டிகோ நிறுவனம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், கொரோனா மூன்றாவது அலையின்போது நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உச்சத்தை அடைந்தது என்றும் குறிப்பிட்ட மருந்துகளை எடுத்துக்கொள்வோர், மூச்சுக்காற்றில் மதுவின் அளவைக் கண்டறியும் பரிசோதனைக்கு உட்படும்போது அதில் எதிர்மறையான முடிவை பெறக்கூடிய சாத்தியம் உள்ளது என்றும் தெரிவித்திருந்தது.
எனினும், பயணிகள், ஊழியர்களின் நலன்களைக் கருத்தில்கொண்டு அனைத்து பாதுகாப்பு நெறிமுறைகளையும் முறையாகப் பின்பற்றி வருவதாக அந்நிறுவனம் மேலும் கூறியுள்ளது.
ஸ்பைஸ் ஜெட், இந்தியன் ஆயில் நிறுவனங்கள் இது தொடர்பாக எந்தக் கருத்தும் வெளியிடவில்லை.