புதுடெல்லி: உக்ரேன், ரஷ்யா மோதல் காரணமாக நாடு முழுவதும் சமையல் எண்ணெய் விலை இரு மடங்காக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் சமையலுக்கு சூரியகாந்தி எண்ணெய் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.
உக்ரேனில் இருந்தே பெரும் அளவில் சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது.
இந்நிலையில், போர் மூண்ட பிறகு எண்ணெய் இறக்குமதி கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது.
இதனால் முன்பு நூறு ரூபாயாக இருந்த ஒரு லிட்டர் சூரியகாந்தி எண்ணெய் இப்போது இரு மடங்காகி 200 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
உக்ரேன் மீது ரஷ்ய படைகள் தாக்குதலைத் தொடங்கி 40 நாள்களுக்கு மேலாகிவிட்டன. ஒருவேளை போர் முடிவுக்கு வந்தாலும்கூட, மீண்டும் எண்ணெய் உற்பத்தி தொடங்கி உக்ரேனின் ஏற்றுமதி அளவு பழைய நிலைக்குத் திரும்ப சில மாதங்கள் ஆகக்கூடும் எனக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, நாடு முழுவதும் நல்லெண்ணெய், கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றின் விலையும் கணிசமாக அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், டெல்லி, மாஸ்கோ இடையேயான விமானச் சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.
ரஷ்யாவுக்குச் செல்லும் விமானங்களின் காப்பீட்டுக் கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டிருப்பதால் டெல்லி, மாஸ்கோ வழித்தடத்தில் வாரந்தோறும் இருமுறை இயக்கப்பட்ட விமானச் சேவைகள் ரத்தானதாகத் தெரிகிறது.

