திருவனந்தபுரம்: இந்தி திணிப்பு, தேசிய ஒருமைப்பாட்டை சிதைக்கும் முயற்சி என்று கூறியுள்ளார் கேரள முதல்வர் பினராய் விஜயன்.
கேரள மாநிலம் கண்ணூரில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மத்திய குழுக் கூட்டம் ஏப்ரல் 4ஆம் தேதி முதல் நேற்று வரை நடைபெற்றது.
இந்த மாநாட்டில் பேசிய கேரள முதலமைச்சர் பினராய் விஜயன், "மத்திய அரசின் இந்தித் திணிப்பை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
"இந்தி திணிப்பு என்பது தேசிய ஒருமைப்பாட்டையும் ஒற்றுமையையும் சிதைக்கும் முயற்சி," என்றார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்பார்ப்பு மிக்க தலைவராக திகழ்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த மாநாட்டில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் பங்கேற்று பேசினார். அப்போது அவர் மலையாளத்தில் தொடங்கி தமிழில் பேசி ஆங்கிலத்தில் தனது உரையை நிறைவு செய்தார்.
இந்த மாநாட்டில் பங்கேற்க மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய பொது செயலாளர் சீதாராம் யெச்சூரியும் கண்ணூர் சென்றிருந்தார்.
"மத்தியில் ஆளும் பாரதிய ஜனதாவை எதிர்க்க வலுவான கூட்டணி அமைக்க வேண்டியது அவசியம். இதற்கான நடவடிக்கைகள் மாநில அளவில் தொடங்கப்பட வேண்டும்.
"அந்த வகையில் தமிழகத்தில் தற்போது ஒத்த கருத்துடைய திமுக, காங்கிரஸ் கட்சிகளுடன் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கூட்டணி அமைத்துள்ளது," என்று பேசினார் யெச்சூரி.
இதற்கிடையே, பள்ளிகளில் இந்திக் கட்டாயம் என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு வடகிழக்கு மாநில மாணவர் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இதுதொடர்பாக பேசிய இந்த அமைப்பின் தலைவர் சாமுவேல் பி ஜிர்வா, "இந்தித் திணிப்பை நாங்கள் எதிர்க்கிறோம்.
"விரும்புபவர்கள் தேர்வு செய்து கொள்ளும் மொழியாக இந்தி இருக்கட்டும். இந்தியைக் கட்டாயம் ஆக்கக் கூடாது," என்றார்.

