டெல்லியில் அதிக வெப்பநிலை
புதுடெல்லி: புதுடெல்லியில் நேற்று முன்தினம் பகல்நேர அதிகபட்ச வெப்பநிலை 42.4 டிகிரி செல்சியசாகப் பதிவாகியுள்ளது. இது கடந்த 72 ஆண்டுகளில், ஏப்ரல் முற்பாதி நாள்களில் பதிவான ஆக அதிக வெப்பநிலையாகும். அது மட்டுமல்லாமல் இந்தக் காலகட்டத்தில் இயல்பான வெப்பநிலையைவிட இது
8 டிகிரி அதிகம் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் வடமேற்கு இந்தியாவிலும் அதையொட்டிய மத்திய இந்தியாவிலும் வெப்பநிலை மேலும் கடுமையாக உயர்ந்து அனல்காற்று வீசுவது தொடரும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
வாக்குறுதிகளாக இலவசங்கள்: ஆணையத்தால் தடுக்க முடியாது
புதுடெல்லி: தேர்தலின்போது அரசியல் கட்சிகள், தேர்தல் வாக்குறுதிகளாக இலவசங்களை அறிவிப்பதற்குத் தடை விதிக்க கோரிய வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதற்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையம் பதில் மனுவில், "அரசியல் கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகளாக இலவசம் வழங்குவதைத் தடுக்க முடியாது. இலவச திட்டங்கள் உள்ளிட்ட அரசின் கொள்கை முடிவுகளை தேர்தல் ஆணையம் முறைப்படுத்த முடியாது. தேர்தலுக்கு முன்போ, பின்போ இலவசம் வழங்குவது சம்மந்தப்பட்ட கட்சியின் கொள்கை முடிவாகும்," என்று கூறப்பட்டுள்ளது.
பினாகா ஏவுகணை சோதனை
பொக்ரான்: மேம்படுத்தப்பட்ட பினாகா எம்கே-1 ஏவுகணை அமைப்பு, தூர இலக்கை தாக்கும் மற்றொரு பினாகா ஏவுகணை அமைப்பு ஆகியவை டிஆர்டிஓ, இந்திய ராணுவத்தால் நேற்று வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.ராஜஸ்தானின் பொக்ரான் தளத்தில் நடைபெற்ற சோதனையில் பினாகா ராக்கெட்டுகள் இலக்கை எட்டியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டிஆர்டிஓ அமைப்பால் பினாகா ஏவுகணைகள் உருவாக்கப்பட்ட நிலையில், தற்போது அவை நவீன தொழில்நுட்பங்களுடன் நீண்ட தூர இலக்கை தாக்கும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளன.
படம்: இணையம்
இந்தி நடிகை சோனம் கபூர் வீட்டில் நகை, பணம் கொள்ளை
புதுடெல்லி: பிரபல இந்தி நடிகை சோனம் கபூரின் இல்லத்தில் 2 கோடியே 50 லட்ச ரூபாய் மதிப்புள்ள நகைகள், ரொக்கம் திருட்டு போய்விட்டன. டெல்லி அம்ரிதா ஷெர்கில் மார்க் பகுதியில் தனது கணவர் அனந்த அஹுஜாவுடன் நடிகை சோனம் கபூர் வசித்து வருகிறார்.
கடந்த பிப்ரவரி 11ஆம் தேதியில் அனந்தின் பாட்டி, வீட்டின் அலமாரியில் இருந்த தங்க நகைகள், பணம் திருடப்பட்டதை கண்டறிந்ததாகவும் இது குறித்து பிப்ரவரி 23ஆம் தேதி புகார் அளித்ததாகவும் போலிசார் தெரிவித்துள்ளனர்.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நகைகள், பணத்தை அந்த அலமாரியில் சரிபார்த்ததாக காவல்துறையிடம் அவர் கூறிய நிலையில், சம்பவம் தொடர்பாக வீட்டில் வேலை செய்யும் 25 ஊழியர்கள், ஓட்டுநர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

