புதுடெல்லி: பெருந்தொற்று சவால்களுக்கு இடையில் 2021-22ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் வேளாண் ஏற்றுமதி இதுவரைஇல்லாத அளவுக்கு 50 பில்லியன் அமெரிக்க டாலரைத் தாண்டி
உள்ளது.
இந்தியாவின் விவசாயப் பொருள் ஏற்றுமதி 20 விழுக்காடு அதிகரித்துள்ளது.
உணவு தானியங்கள், பருப்பு வகைகள், காய்கறிகள், பழங்கள், தோட்டக்கலைப் பொருள்கள், முந்திரி, பதனிடப்பட்ட இறைச்சி வகை உள்ளிட்ட வேளாண் பொருள்கள் பெருமளவில் ஏற்றுமதி செய்யப்பட்டாலும் அரிசி ($9.65 பில்லியன்), கோதுமை ($2.19 பில்லியன்), சர்க்கரை ($4.6 பில்லியன்) போன்ற முக்கியப் பொருள்கள் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
கோதுமை ஏற்றுமதி முன் எப்போதும் இல்லாத அளவுக்கு 273 விழுக்காடு அதிகரித்துள்ளது. சென்ற ஆண்டில் அரிசி ஏற்றுமதி 9.35% அதிகரித்தது.
உலகின் கோதுமை தேவையைப் பெருமளவு பூர்த்தி செய்து வந்த உக்ரேன், ரஷ்யா நாடுகளுக்கு இடையே நடந்துவரும் சண்டை காரணமாக இந்தியாவின் வேளாண் ஏற்றுமதி அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, இந்தியாவின் வேளாண் ஏற்றுமதியை மேலும் அதிகரிக்க வழிவகுக்கும் வகையில், இந்திய வாழைப்பழம், இளம் மக்காச்சோளம் எனும் 'பேபி காா்ன்' ஆகியவை கனடா நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படுவதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
இந்திய வேளாண், விவசாயிகள் நலத்துறை செயலாளா் மனோஜ் அஹுஜா, கனடா தூதா் கேமரூன் மெக்கே ஆகியோருக்கிடையே சென்ற வாரம் இதுகுறித்த பேச்சுவார்த்தை நடந்தது.
இந்திய வாழைப்பழங்கள் உலக அளவில் 25 விழுக்காட்டு இடத்தைப் பெற்றுள்ளது. இந்திய அளவில் தமிழ்நாடு, ஆந்திரா குஜராத், மகாராஷ்டிரா, கேரளா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்கள் 75 விழுக்காட்டு வாழைப்பழங்களை உற்பத்தி செய்கின்றன.

