செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
2ea07bbc-5c16-415d-adfb-3d19b4025ad2
-

ராம நவமி ஊர்வலத்தில் மோதல்: மத்தியப் பிரதேசத்தில் ஊரடங்கு

போபால்: மத்தியப் பிரதேச மாநிலத்தின் கார்கோன் பகுதியில் நேற்று முன்தினம் ராம நவமியை ஒட்டி ஊர்வலம் நடந்தது. தலப் சவுக் பகுதியில் தொடங்கிய ஊர்வலம் முஸ்லிம்கள் அதிகமாக இருக்கும் பகுதியின் வழியாக சென்றபோது அங்குள்ளவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. சத்தமாக ஒலிபெருக்கிகளை இசைக்க எதிர்ப்பு தெரிவித்ததால் மோதல் வெடித்ததாகத் தெரிகிறது. இதனையடுத்து இருதரப்பினரும் மோதிக்கொண்டனர். வன்முறையைக் கட்டுப்படுத்த அங்கு வந்த காவல்துறையினர் வாகனங்களுக்குத் தீ வைக்கப்பட்டதோடு, இரு தரப்பினரும் கற்களை வீசித் தாக்கிக்கொண்டனர். அப்பகுதியில் நான்கு வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. ஊர்வலம் பாதியிலேயே தடைபட்டது. இதனையடுத்து தலப் சவுக் பகுதியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி: விவசாயிகளின் வலுவே புதிய இந்தியாவின் வளம்

புதுடெல்லி: நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளும் வலுவாக இருந்தால்தான் புதிய இந்தியா இன்னும் வளமானதாக இருக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி, தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். விவசாயிகளின் வாழ்க்கையை மேம்படுத்த பிரதமா் உழவா் நல நிதி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அவற்றின் மூலம் கோடிக்கணக்கான விவசாயிகள் பலனடைந்து வருகின்றனர். விவசாயிகளின் உழைப்பைக் கண்டு நாடு பெருமை கொள்கிறது. விவசாயிகள் வலுப்பெற்றால்தான் புதிய இந்தியா பன்மடங்கு வளம்பெற முடியும். விவசாயிகள் நல நிதி மற்றும் விவசாயம் தொடா்பான பல திட்டங்கள் கோடிக்கணக்கான விவசாயிகளுக்குப் புதிய வலிமையைக் கொடுத்துள்ளது என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன் என்று அந்தப் பதிவில் அவா் குறிப்பிட்டுள்ளாா்.

500 டன் இரும்புப்பாலம் திருட்டு

பாட்னா: பீகார் மாநிலத்தின் ரோக்தாஸ் மாவட்டத்தில் உள்ள அமியாவார் என்னும் கிராமத்தில் நாற்பது ஆண்டுகால பழமையான 500 டன் எடையுள்ள இரும்புப்பாலம் ஒன்று இருந்தது. அதன் அருகே சிமெண்ட் பாலம் ஒன்று புதிதாக அமைக்கப்பட்டுவிட்டதால் இந்த இரும்புப் பாலம் புழக்கமின்றிக் கிடந்தது. இந்நிலையில் அங்கு நீர்ப்பாசனத் துறையில் இருந்து வந்திருப்பதாகக் கூறி சிலர் அந்தப் பாலத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக வெட்டி இரண்டே நாளில் 69 அடி நீளமுள்ள அந்தப் பாலம் முழுவதையும் வெட்டிச் சென்றுவிட்டனர். பின்னர்தான் அவர்கள் அரசாங்கத்தால் அனுப்பப்படவில்லை என்பதை அறிந்து மக்கள் காவல்துறையில் புகார் கொடுத்தனர். காவல்துறை நடத்திய விசாரணையில் இரண்டு அரசாங்க அதிகாரிகள் உட்பட 8 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.